கேரளாவில் பைக் மோதி காயமடைந்து சாலையில் கிடந்த முதியவருக்கு அந்த வழியாக வந்த ராகுல் காந்தி முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு செல்ல உதவினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பி.யுமான ராகுல் காந்தி, மூன்று நாள் சுற்றுப் பயணத்திற்காக இருதினங்களுக்கு முன் கேரளா வந்தார். வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், கம்யூனிஸ்ட் கட்சியினரால் தாக்கப்பட்ட தன்னுடைய எம்.பி. அலுவலகத்தையும் பார்வையிட்டார். நேற்று முன்தினம் இரவு மலப்புரம் மாவட்டம், வண்டூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். பின்னர் காரில் அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தார். வடபுரம் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, ரோட்டில் 80 வயது முதியவர் ஒருவர் பைக் மோதி காயமடைந்த நிலையில் காணப்பட்டார். அதைப் பார்த்தவுடன் காரை நிறுத்தி ரோட்டில் இறங்கிய ராகுல் காந்தி, அந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க உதவினார்.
பின்னர் ஆம்புலன்சில் அந்த முதியவரை ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதன் பிறகே ராகுல் காந்தி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆம்புலன்ஸ் வரும் வரையில் ராகுல் காந்தியும் சாலையில் நின்று, முதியவருக்கு உதவியது அப்பகுதி மக்களின் மனதை கவர்ந்தது.