இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கனிமொழி எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று ராமேசுவரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் 3,544 தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் பலமுறை விளக்கியும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல, தமிழக முதல்வர் ஒவ்வொரு முறையும் பிரதமரை சந்திக்கும்போது, மீனவர் பிரச்சினை குறித்து தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இரு நாட்டு எல்லைகளில் மீனவர் பிரச்சினை சார்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, இரு தரப்பினரும் பாதுகாப்பாக மீன் பிடிக்கின்றனர். அதேபோல, இந்தியா-இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு, தொடர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனாலும், இதுவரை மீனவர் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. தமிழக முதல்வர், விரைவில் மத்திய அரசின் இந்தப் போக்கை சரி செய்து, மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பார். இவ்வாறு கனிமொழி பேசினார்.
பின்னர், பத்திரிகை இணையதளம் முடக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “பாஜக ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. எதிர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாத மத்திய அரசு, ஊடகங்களை முடக்கி வருகிறது. கருத்து சுதந்திரத்தை மெல்ல மெல்ல அழிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணமாக உள்ளது” என்றார்.