ஒழுங்குமுறை ஆணையம் அனுமதியின்றி மின்சாரம் கொள்முதல்: அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையமின்றி மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில், கடந்த ஆண்டு கோடைக்காலத்தின் அதிகபட்ச மின் தேவையாக 20,830 மெகாவாட் பதிவாகியிருந்தது. இதற்காக 45.43 கோடி யுனிட் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதைவிட நடப்பாண்டு கோடைக்கால மின் தேவை என்பது 6 சதவீதம் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மின்வாரியத்துக்கு மரபுசார்ந்த ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,707 மெகாவாட் மட்டும் தான்.

இதை சமாளிக்க 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் 2,750 மெகாவாட் மின்சாரமும், அதிகபட்ச மின் தேவை உள்ள மாலை நேரங்களில் மட்டும் கிடைக்கும் வகையில் 5,775 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தபுள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது. தமிழகத்தின் மின் தேவை உற்பத்தியை விட அதிகமாக இருந்தால் அதை வெளிச்சந்தையில் இருந்துதான் வாங்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

ஆனால் அதற்கு முன்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் பெறவேண்டும். அதை சற்றும் மதிக்காத மின்சார வாரியமும், தமிழக அரசும் தங்களது விருப்பங்களையும், தேவைகளையும் செயல்படுத்திவிட்டு, அதன்பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கட்டாயப்படுத்திப் பெறுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. இந்தபோக்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின் வாரியம் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.