பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி: அண்ணாமலை கண்டனம்!

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாலியல் வன்கொடுமை, பாலியல் தொல்லை, பாலியல் சீண்டல் என நாள்தோறும் பல்வேறு சமூக விரோத செயல்களால் பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடு, பள்ளி, கல்லூரி, பொது இடம் என அனைத்துப் பகுதிகளும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற இடமாக மாறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அனைத்து தரப்பினரிடையேயும் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. பெண் பிள்ளைகளைப் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சாதாரண பெண்களுக்கு மட்டுமல்லாமல் காவல் துறை போன்ற உயர் துறைகளில் இருக்கும் பெண்களும் பாலியல் பிரச்சனைக்குள்ளாகும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில், பெண் காவலர் ஒருவர் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர காவல் நிலையத்தில் நுண்ணரிவுப் பிரிவில் பணியாற்றி வருபவர் 25 வயதான பெண் காவலர். இவர் நேற்று முன் தினம் பணி முடிந்ததையடுத்து சென்னை எழும்பூரில் இருந்து பழவந்தாங்கலுக்கு மின்சார ரயிலில் சென்றுள்ளார். பிளாட்பாரத்தில் அவர் நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

அந்த பகுதி இருட்டாகவும், ஆள் அரவமற்று இருந்ததாலும் அச்சமடைந்த அந்த பெண் காவலர் வேகமாக செல்ல முயன்றபோது அந்த மர்ம நபர் வேகமாகச் சென்று அப்பெண்ணின் பின்பக்கத்தில் இருந்து வாயைப் பொத்தி கீழே தள்ளிவிட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த நபரின் கையைக் கடித்த அந்த பெண் காவலர் சப்தமிட்டுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மக்கள் அந்த நபரை அடித்து உதைத்து காவல் துறையில் ஒப்படைத்துள்ளனர்

பெண் காவலருக்கே தமிழகத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவி வருகிறது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளதாவது:-

தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக மாறிவிட்டது. அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ சமூகவிரோதிகளுக்கு எந்த பயமும் இல்லை. ஒட்டு மொத்த அரசு இயந்திரமே செயலிழந்து கிடக்கிறது. சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. முதலமைச்சர் வெற்று விளம்பரங்களில் லயித்துக் கிடக்கிறார்.

தமிழகத்தில் தினம் ஒரு பாலியல் குற்றச் செய்தி வெளிவருகிறது. அரசுத் தரப்பில் இருந்தும், காவல்துறை தரப்பில் இருந்தும் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தப் பகுதியிலுமே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, ஒவ்வொரு குடும்பத்தையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

திமுக அரசும், காவல்துறையும் செயல்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால், பொதுமக்களே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இது சமூகத்தை எங்கு கொண்டு செல்லும் என்பதை உணர்ந்திருக்கிறாரா முதலமைச்சர் முக ஸ்டாலின். இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.