இந்தியத் தேர்தல்களில் ‘அந்நிய செல்வாக்கு’ கவலை அளிக்கிறது: மாயாவதி!

இந்திய தேர்தல்களுக்காக அமெரிக்கா 21 மில்லியன் டாலர் வழங்கியதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகவும், நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மாயாவதி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதை அடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் தலைமையில் ‘அரசு செயல் திறன்'(டிஓடிஜி) என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை அமெரிக்க அரசின் செலவினங்களை குறைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்பட இருந்த நிதியுதவி ரத்து செய்யப்படுவதாக டிஓடிஜி நேற்று அறிவித்தது. இதன்படி இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி ($21 மில்லியன்) நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஓடிஜி தெரிவித்திருந்தது. எனினும், இந்த தொகை இந்தியாவில் எந்த அமைப்புக்கு வழங்கப்பட இருந்தது என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கடந்த 2012-ம் ஆண்டில் தலைமை தேர்தல் ஆணையராக குரேஷி பதவி வகித்தார். அப்போது அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸின் அறக்கட்டளையுடன் குரேஷி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். சோரஸின் அறக்கட்டளைக்கு அமெரிக்க அரசே பெருமளவில் நிதியுதவி வழங்கி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க 21 மில்லியன் டாலர் ஒதுக்கப்பட்டிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்த நிதியை பாஜக பெறவில்லை. அப்படியென்றால் அமெரிக்காவின் நிதியுதவியை பெற்றது யார்?” என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில், குரேஷி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில் கூறியுள்ளதாவது:-

நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, ​​இந்திய தேர்தல் ஆணையம், இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக ஒரு அமெரிக்க நிறுவனத்தின் சில மில்லியன் டாலர் நிதியுதவியை பெறுவதற்கு ஏற்ப ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களின் ஒரு பிரிவில் வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை.

நான் தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது, ​​2012 இல் IFES உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இருந்தது. அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் பயிற்சி மற்றும் வள மையமான IIIDEM மூலம் விருப்பமுள்ள நாடுகளுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் மற்றும் தேர்தல் மேலாண்மை அமைப்புகளுடன் நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தோம். ஆனால், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதியுதவி அல்லது நிதி அளிப்பதாக வாக்குறுதி என எதுவும் இல்லை. உண்மையில், இருபுறமும் எந்தவொரு நிதி மற்றும் சட்டப்பூர்வ கடமையும் இருக்காது என்பதை புரிந்துணர்வு ஒப்பந்தம் தெளிவுபடுத்தியது.

எந்தவொரு தெளிவின்மைக்கும் இடமளிக்காதபடி இந்த நிபந்தனைகள் இரண்டு வெவ்வேறு இடங்களில் செய்யப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் தொடர்புடைய எந்தவொரு நிதியையும் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது மற்றும் தீங்கிழைக்கும் செயல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தச் செய்தியை குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளதாவது:-

இந்தியாவில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிப்பதற்காக 21 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கப்பட இருந்ததாக அமெரிக்காவிலிருந்து வரும் செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. நாட்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் தலையிடுவதாகாதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். இத்தகைய நிதி உதவியால் யார் பயனடைகிறார்கள்?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்பது ஏமாற்றமளித்தாலும் தொண்டர்கள் நம்பிக்கையை இழக்கக் கூடாது. அரசாங்கப் பாதுகாப்பில் உள்ள பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் ஆம் ஆத்மி கட்சி (AAP) ஆகியவற்றின் அதீத ஆதிக்கம், டெல்லி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு சாதகமற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியது. ஹரியானாவைப் போலவே டெல்லி தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் முழு பலத்துடன் போராடினர். இருப்பினும், எதிர் கட்சிகளின் வலுவான அரசியல் சூழ்ச்சி, ஏமாற்றும் வாக்குறுதிகள் மற்றும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அபரிமிதமான ஆதிக்கம் காரணமாக, பகுஜன் சமாஜ் கட்சி எதிர்பார்த்த முடிவுகளை அடைய முடியவில்லை.

டெல்லி தேர்தல் முடிவுகள் ஏமாற்றமளிக்கக் கூடியவை என்ற போதிலும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சோர்வடைய வேண்டாம். தங்கள் லட்சியத்துக்காக உறுதியுடன் இருக்க வேண்டும். கட்சியின் சித்தாந்த அடித்தளத்தையும் வரலாற்று வெற்றிகளையும் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.

பகுஜன் சமாஜ் கட்சி என்பது போராட்டத்தின் மூலம் பல அரசியல் மற்றும் தேர்தல் வெற்றிகளைப் பெற்ற அம்பேத்கரியக் கட்சி என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில், அதன் நான்கு பதவிக் கால ஆட்சியில், ஏழை எளிய மக்களின் கண்ணியம், சுயமரியாதை மற்றும் பொருளாதார விடுதலைக்காக பகுஜன் சமாஜ் கட்சி விரிவாகப் பாடுபட்டுள்ளது.

இதன் காரணமாக, சாதி அடிப்படையிலான, முதலாளித்துவ மற்றும் வகுப்புவாத சக்திகள் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக தொடர்ந்து சதி செய்து, அரசியல், நிதி மற்றும் பொய் பிரச்சாரம் உள்ளிட்ட சாத்தியமான அனைத்து தந்திரங்களையும் பயன்படுத்தி கட்சியை பலவீனப்படுத்துகின்றன. இருப்பினும், நாம் சோர்வடையாமல், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கற்பனை செய்தபடி, வாக்குரிமை மூலம் அதிகாரத்தை அடைவதற்கு தொடர்ந்து அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.