இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும் என அமித்ஷா கூறினார்.
தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில், மாதாப்பூர் சர்வதேச கன்வென்சன் சென்டரில், பெரும் எதிர்பார்ப்புகளுடன் பா.ஜ.க.வின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, பா.ஜ.க.வின் தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா, கட்சியின் மூத்த தலைவர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி, பா.ஜ.க. ஆளுகிற மாநிலங்களின் முதல்-மந்திரிகள், கட்சியின் தேசிய நிர்வாகிகள் என சுமார் 350 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று கட்சியின் அரசியல் தீர்மானத்தை முன்மொழிந்து கட்சியின் மூத்த தலைவரான அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
வாரிசு அரசியல், சாதி வெறி, திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவை மிகப்பெரும் பாவங்கள் ஆகும். இவைதான் நாட்டின் பல்லாண்டு கால துன்பங்களுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. நாட்டில் தொடர்ச்சியாக நடந்த தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது என்றால், அது கட்சியின் வளர்ச்சி அரசியல், செயல்திறன்களுக்கு மக்கள் அளித்துள்ள அங்கீகாரத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது. மேலும், வாரிசு அரசியலுக்கும், சாதி வெறிக்கும், திருப்திப்படுத்தும் அரசியலுக்கும் முடிவு கட்டுவதற்கு அழைப்பு விடுப்பதாகவும் அமைந்துள்ளது.
தெலுங்கானா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பா.ஜ.க. முடிவுரை எழுதும். ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, ஒடிசா போன்ற மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும். இன்னும் 40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் சகாப்தம்தான். இந்தியா உலகுக்கு தலைமை தாங்கும் நிலை உருவாகும். பா.ஜ.க.வின் அடுத்த சுற்று வளர்ச்சி என்பது தென்மாநிலங்களில் இருந்து வரும் என்று அனைவரிடத்திலும் ஒரு நம்பிக்கையும், கண்டுபிடிப்பும் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில், அதை ஆளுகிற குடும்பம் அதன் நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டதால், அதன் அமைப்பிற்குள் ஜனநாயகத்துக்கு போராடுகிற நிலை உள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பிளவுபட்டு வெறுப்படைந்துள்ளன.
குஜராத் இனக்கலவரங்கள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி, பிரதமர் மோடி உள்ளிட்ட 64 பேரும் குற்றமற்றவர்கள் என்று அளித்த அறிக்கையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். ஆனால் அந்த முறையீட்டை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இது வரலாற்றுச்சிறப்பு வாய்ந்தது. பிரதமர் மோடியின் பெயரை களங்கப்படுத்துவதற்காக எதிர்க்கட்சிகள், ஊடகத்தின் ஒரு பிரிவினர், சில தன்னார்வ தொண்டு அமைப்புகள் சதி செய்ததை சுப்ரீம் கோர்ட்டு அம்பலப்படுத்தி உள்ளது. மோடி அவமானங்களை சந்தித்தபோதும் அமைதி காத்தார். அரசியல் சாசனம் மீது நம்பிக்கை வைத்தார்.
ஆனால் இதற்கு மாறாக நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியபோது காங்கிரசார் அராஜகம் ஏற்படுத்த முயற்சித்தனர். தனது முன்னணி தலைவர்களை அரசியல் ரீதியில் பழிவாங்கும் விதமாக விசாரணை நடததப்படுவதாக நாடளாவிய போராட்டங்களை நடத்தினார்கள். பிரதமர் மோடி உலகின் முன்னணி தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். சுற்றுச்சூழல் தொடங்கி பயங்கரவாதம் வரை அவரது கருத்தை உலகம் அறிய விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் நீண்டதொரு அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் முக்கிய சாராம்சம்:- சாதிவெறி, வாரிசு அரசியல், திருப்திப்படுத்தும் அரசியல் ஆகியவற்றின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. அடுத்த 30-40 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.வின் வளர்ச்சி அரசியல் சகாப்தம்தான் நீடிக்கும். எதிர்க்கட்சிகள் பிளவுபட்டுள்ளன. அவை ஊழலில் ஈடுபட்டுள்ளன. அக்னிபத் திட்டம், இளைஞர்கள் ஆயுதப்படைகளில் சேருவதற்கான நல்லதொரு திட்டம் ஆகும். இந்த தீர்மானத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷா முன்மொழிந்தார். அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மாவும், கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் வழிமொழிந்தனர்.
மேலும், தெலுங்கானா மாநிலத்தை ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அரசுக்கு எதிராக கூட்டத்தில் கட்சியின் தேசிய துணைத்தலைவர் டி.கே. அருணா தீர்மான அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், “தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி அரசு குடும்ப அரசியலின் சின்னமாகவும், ஊழல் அரசியலின் சின்னமாகவும் மாறி விட்டிருக்கிறது. மாநில மக்கள் அனுபவிக்கும் சிரமங்களுக்கு வேதனை தெரிவிக்கிறோம்” என கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மான அறிக்கையும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.