பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது? என டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
சென்னை பழவந்தாங்கல் ரெயில் நிலையத்தில் பெண் காவலரிடம் போதை ஆசாமி ஒருவர் செயினை பறிக்க முயற்சி செய்ததோடு, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பதாகவும் ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவும் தமிழகத்தை பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்குவது வெட்கக் கேடானது.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து இதுவரை வாய் திறக்காத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன் துறை சார்ந்த பெண் காவலரிடமே நடைபெற்றிருக்கும் அத்துமீறல் தொடர்பாக வாய் திறப்பாரா? அல்லது எப்போதும் போல மவுனம் காக்க போகிறாரா?
குற்றச் சம்பவங்களை தடுத்து மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை, ஆளுங்கட்சியின் கைப்பாவையாக மாறியதன் விளைவு தற்போது அத்துறையைச் சார்ந்த பெண் காவலர் ஒருவருக்கே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளதோடு ஒட்டுமொத்த காவல்துறை மீதான மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பையும் இழக்கச் செய்திருக்கிறது.
எனவே, இனியாவது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.