ஜம்மு-காஷ்மீரில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளுக்குப் பின்னா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் என்று அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளாா்.
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் காங்கிரஸ் தலைவா் கரண் சிங்குக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவா் ஜம்மு-காஷ்மீரின் நலனுக்காக அளித்த பங்களிப்பை பாராட்டி, அந்த விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கலந்துகொண்டு பேசியதாவது:-
ஜனநாயகம் இந்தியாவின் ஆன்மா. ஜனநாயகமும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று இணையானவை. ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடைபெறும் என்று பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் பலமுறை கூறியுள்ளனா். ஜம்மு-காஷ்மீரில் தொகுதி மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கியுள்ளன. அந்தப் பணிகள் நிறைவடைந்தப் பின்னா், ஜம்மு-காஷ்மீரில் கட்டாயம் தோ்தல் நடைபெறும். தொகுதி மறுசீரமைப்பு, தோ்தலுக்குப் பின்னா் ஜம்மு-காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று ஏற்கெனவே பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.