நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை: திருமாவளவன்!

நான் சிபிஎஸ்இ பள்ளி எதுவும் நடத்தவில்லை. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை என்று திருமாவளவன் கூறினார்.

மும்மொழிக்கொள்கை விவகாரம் தமிழகத்தில் தற்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. பள்ளியின் நிர்வாக குழு தலைவராக விசிக தலைவர் திருமாவளவன், செயல்பட்டு வருகிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்? என கேள்வியெழுப்பிய அண்ணாமலை, இந்த விவகாரத்தில் திருமாவளவனும் இரட்டை வேடம் போடுவதாக தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார்.

அண்ணாமலையின் இந்த பதிவுக்கு விசிக தலைவர் திருமாவளவன் எதிர்வினையாற்றியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது:-

அண்ணாமலை பரபரப்புக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக்கொண்டு இருக்கிறார். அவருக்கு ஊடக கவன ஈர்ப்பு முக்கியமானதாக இருக்கிறது. ஒரு நாகரிக அணுகுமுறை என்பதை முற்றாக தவிர்த்துவிட்டு யாரையும் எப்படியும் விமர்சிக்கலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து அவர் அரசியல் செய்கிறார்.

அவருடைய அணுகுமுறை என்பது வியப்பாக இருக்கிறது. இரட்டை வேடம் போட வேண்டிய நிலை எனக்கு இல்லை. நான் சி.பி.எஸ்.இ. பள்ளி நடத்தவில்லை. எங்கள் இடத்தில் ஒரு நிறுவனம் பள்ளி நடத்த அனுமதி கேட்டுள்ளனர். அந்த பள்ளியில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. வகுப்புகளும் தொடங்கவில்லை. அறிவிப்பு மட்டுமே வந்துள்ளது. அந்த இடம் எங்களுடைய இடம் என்பதால் என் பெயரை பயன்படுத்தியுள்ளனர். ஒரு மாணவர் கூட சேராத பள்ளியில் மும்மொழி கட்டாயமாக வைத்துள்ளதாக, ஊடக விமர்சனத்திற்காக அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.