சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியின் 50-வது ஆண்டையொட்டி ‘சமூக பணியில் சுவாமி விவேகானந்தரின் தத்துவங்கள்’ எனும் தலைப்பில் கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
சமூகப் பணிகள் என பார்க்கும்போது, சுவாமி விவேகானந்தரின் சேவைகள்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒவ்வொருவரும் தன்னலமின்றி சேவை செய்ய வேண்டும். ஆங்கிலேய ஆட்சியில் நமது கலாசாரம், பண்பாடு, தத்துவத்தை அழித்தனர். அப்போது, நமது நாடு மிக மோசமான நிலையில் இருந்தது. ஆன்மிக பண்பாடு என்பது அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் நாட்டில் தீண்டாமை இருப்பது வேதனை அளிக்கிறது. தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும். தீண்டாமையை ஒழிக்க மாணவர்களும், சமூகமும் பாடுபட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.