“தமிழ் மொழி போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி” என உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக தாய்மொழிகள் தினம் இன்று (பிப்.21) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி!
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்!
அகத்திலும் புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும் நற்றமிழர் தாய்மொழி, போற்றுதலுக்குரிய பழமை உடைய மொழி மட்டுமல்ல; பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி!
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளர்.
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று தமிழகத்துக்கு மத்திய அரசு மறைமுக அழுத்தம் கொடுத்துவரும் சூழலில், ”பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல்கொண்ட செம்மொழி” என்று தமிழ் மொழி பற்றி முதல்வர் பெருமிதம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
உலகிலேயே முதன்முறையாக ஒரு மொழியின் அடிப்படையில் வங்கதேசம் என்ற தனி நாடு உருவானது. அந்த நாடு உருவானதன் போராட்டப் பின்னணியில்தான் தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் சர்வதேசக் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ, வங்கதேசத்தின் மொழிப் போர் தொடங்கிய பிப்ரவரி 21-ஐ உலகத் தாய்மொழி நாளாக ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என 1999 நவம்பர் 17-ல் தீர்மானம் நிறைவேற்றியது. பின்பு, ஐக்கிய நாடுகள் சபையும் தனது உறுப்புநாடுகள் இதைக் கொண்டாட வேண்டுமென பொது அவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனை ஒட்டியே ஆண்டுதோறும் பிப்.21 உலக தாய்மொழி நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.