அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது: ஆளுநர் தரப்பில் பதில்மனு!

அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்ட ரீதியாக முழு அதிகாரம் உள்ளது என தமிழக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம் உள்ளிட்ட தமிழக அரசின் 12 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பதை எதிர்த்து தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, பி.வில்சன் ஆகியோரும், ஆளுநர் தரப்பில் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணியும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்த நீதிபதிகள், ஆளுநருக்குரிய சட்டப்பூர்வ அதிகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி இதுதொடர்பாக இருதரப்பிலும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி தமிழக அரசு தரப்பில், ‘மசோதாக்களை சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அதற்கு ஆளுநர் கட்டாயம் ஒப்புதல் அளித்தாக வேண்டும் என அரசியல் சாசனத்தின் பிரிவு 200 கூறுகிறது. அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டே ஆளுநர் முடிவுகளை எடுக்க வேண்டும். ஆளுநருக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆளுநர் எந்தவொரு தனிப்பட்ட முடிவையும் தன்னிச்சையாக எடுக்க முடியாது’ என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆளுநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசியல் சாசனம் பிரிவு 200-ல் ஆளுநருக்கு தனிப்பட்ட விருப்புரிமை அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதன்படி பேரவை எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. அதேபோல அரசின் மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநருக்கு சட்டரீதியாக முழுஅதிகாரம் உள்ளது. சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை நிறுத்தி வைத்தாலே அது தானாக செயலிழந்து விட்டதாகவே அர்த்தம். அந்த மசோதா எதற்காக நிறுத்திவைக்கப்பட்டது என்பதற்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை செயலிழந்துவிட்ட மசோதாவை மீண்டும் பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்பினால் அதற்கு கட்டாயம் ஒப்புதல் அளித்தாக வேண்டிய அவசியமும் ஆளுநருக்கு இல்லை.

இருப்பினும் அதுபோன்ற மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கலாம். இதற்கு எந்த தடையும் கிடையாது. குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பஞ்சாப் மாகாண வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு எங்களுக்குப் பொருந்தாது. இருப்பினும் தேவைப்பட்டால் தமிழக ஆளுநருக்கு எதிரான இந்த வழக்கை உச்ச நீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம். அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது. ஆனால் துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநரை நீக்குவது என்பது அவருடைய அதிகாரத்தை பறிக்கும் செயல். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.