தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பாஜகவுக்குத் தமிழ் மேல் உள்ள வெறுப்பு இந்தச் சட்டவரைவிலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-
“சட்டம் ஒரு இருட்டறை, அதில் வக்கீலின் வாதம் விளக்கு” என்றார் பேரறிஞர் அண்ணா. வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 என்பது சட்டத் துறையின் சுதந்திரம் மீது தொடுக்கப்படும் நேரடித் தாக்குதல் ஆகும்.
முதலில், NJAC வழியாக நீதிபதி நியமனங்களை அபகரிக்க முயன்றது, பின்னர் நீதிபதி நியமனங்கள் மற்றும் பணியிட மாற்றங்களில் கொலீஜியத்தின் பரிந்துரைகளைப் புறந்தள்ளியது என 2014 முதல் ஒன்றிய பாஜக அரசானது அமைப்பு ரீதியாக நீதித்துறையின் சுதந்திரத்தைச் சிதைத்து வருகிறது.
தற்போது பார் கவுன்சில்களின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக் கொள்ள முயல்வதன் மூலம் சட்டத் தொழிலின் தன்னாட்சியைப் பறித்து, நீதித்துறையின் சுதந்திரத்தையே பலவீனப்படுத்தப் பார்க்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை, மெட்ராஸ் பார் கவுன்சில் என மாற்ற நினைப்பதன் மூலம் பாஜகவுக்கு தமிழ் மேல் உள்ள வெறுப்பு இந்த சட்ட வரைவிலும் தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வெறும் பெயரல்ல, அது எம் அடையாளம். தன்னியல்பாக வெடித்த போராட்டங்களாலும், கடும் எதிர்ப்புகளாலும் தற்போது இந்தச் சட்டமுன்வடிவைத் திரும்பப் பெறும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப்பட்டுள்ளது. எனினும், இது மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, புதிய வடிவில் கொண்டு வரப்படும் என்பது கண்டனத்துக்குரியது ஆகும். இந்தச் சட்டவரைவை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டும், சட்டத்தொழிலின் தன்னாட்சியை மதிக்க வேண்டும் என ஒன்றிய அரசைத் திமுக வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.