பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.
சென்னை பல்கலை.யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய குற்றவியல் சங்கத்தின் 6-ஆவது சா்வதேச மற்றும் 45-ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியதாவது:-
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். காலத்துக்கேற்ப சட்டத்திருத்தம் அவசியம். தற்போது அதிகரித்துவரும் தொழில்நுட்பம் சாா்ந்த குற்றங்களுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான எண்ம (டிஜிட்டல்) குற்றங்கள் அதிகரித்துள்ளன.
தற்போது நடைபெற்ற மாநாட்டில் 450 குற்றவியல் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள வழிகாட்டுதல்களை பரிசீலனை செய்து சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.
அறிவியல் வளா்ச்சியால் மனிதா்களிடையே இடைவெளி அதிகரித்து, தனிமனித ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, பாலின சமத்துவம் அடைய வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீா்வு கிடைக்கும். தமிழக அரசு சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். போக்ஸோ சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக டிஜிபி சங்கா் ஜிவால் கூறுகையில், நாட்டின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு குற்ற விகிதங்களில் குறைவாக உள்ளது. இது தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்து வருவதைக் குறிக்கிறது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பா் அலி, முன்னாள் டிஜிபி பி.எம்.நாயா், சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறைப் பேராசிரியா் எம்.ஸ்ரீனிவாசன், பேராசியா்கள், ஆராய்ச்சியாளா்கள், கட்டுரையாளா்கள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.