தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அக்கட்சியின் மருத்துவரணி செயலாளர் நா.எழிலன் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தின் 38 மாவட்டங்களில் முதல்வர் மருந்தகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இங்கு பிற மருந்தகத்தை ஒப்பிடும்போது மருந்துகளின் விலை 50 முதல் 75 சதவீதம் வரை குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடுத்தரக் குடும்பத்தினரின் பொருளாதார சுமை பெரியளவில் குறையும். இத்திட்டத்தில் முதல்வர் மேற்பார்வையில் கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகம் இணைந்து செயல்படுகிறது. மருந்தகம் அமைக்க விரும்பும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1.50 லட்சம் உபகரணங்கள் கொள்முதல் செய்யவும், மீதமுள்ள ரூ.1.50 லட்சம் மதிப்பில் அதிகம் விற்பனையாகும் மருந்துகளாகவும் வழங்கப்படுகிறது. இவ்வாறு கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 500 கடைகளையும், தொழில் முனைவோரின் 500 கடைகளையும் முதல்கட்டமாக முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். மக்களின் மகத்தான ஆதரவுடன் இத்திட்டம் வெற்றி பெறும்.
2006-14 காலகட்டத்தில் கூட்டுறவு மருந்து கடைகள் என்ற பெயரில் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக தான் அதிமுக ஆட்சியில் அம்மா மருந்தகங்கள் அமைக்கப்பட்டன. அவை இடையூறின்றி செயல்படும். இவை கூட்டுறவு துறையால் நடத்தப்படுபவை. அங்கு வெளி சந்தையை விட 20 சதவீதம் மலிவான விலையில் மருந்துகள் விற்கப்படும். ஆனால், முதல்வர் மருந்தகத்தில் தமிழ்நாடு மருந்துகள் சேவை கழகத்தின் ஜெனரிக் மருந்துகளும், கூட்டுறவுத் துறையின் பிராண்டட் ஜெனரிக் மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் விற்கப்படும். ஜெனரிக், பிராண்டட் மருந்துகளுக்கான மூலக்கூறு ஒன்று என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், முதல்வர் மருந்தகத்தின் மருந்துகள் அனைத்தும் 2 கட்ட தரப் பரிசோதனைக்கு பிறகே விற்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடர்ந்து செயல்படும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டணமில்லா மருந்து விற்பனையை நிறுத்திவிட்டு, லாபம் சம்பாதிக்கும் நோக்கில் மத்திய அரசின் மருந்தகம் தொடங்கப்பட்டது. ஆனால், ஏழை மக்களுக்கு கட்டணமில்லா மருந்துகள் அரசு மருத்துவமனை மூலம் வழங்கிவிட்டு, நடுத்தர மக்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் முதல்வர் மருந்தகம் மூலம் மருந்துகள் வழங்கப்படுகிறது.
மத்தியில் மருந்து கொள்முதலுக்கு 14 நாட்களாகும். இங்கு 48 மணி நேரத்துக்குள் வழங்கப்படுகிறது. அங்கு வெளிச்சந்தையிலும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முதல்வர் மருந்தகத்தில் அரசு நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே கொள்முதல் செய்யப்படும். எடுத்துக்காட்டாக நீரிழிவுக்கான (மெட்ஃபார்மின்) 30 மாத்திரை முதல்வரின் மருந்தகத்தில் ரூ.11-க்கும், மத்திய அரசு மருந்தகத்தில் ரூ.30-க்கும், தனியார் மருந்தகத்தில் ரூ.70-க்கும் விற்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் மருந்தகத்தை விட 20 சதவீதம் வரை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் விற்கப்படுகிறது. இங்கு 762 மருந்து வகைகள், அறுவை சிகிச்சைக்கான சில உபகரணங்கள், டாம்ப்கால் உள்ளிட்ட சித்த மருந்துகள் போன்றவை விற்கப்படும். சுகாதாரமும் கல்வியும் மாநில பட்டியலில் இருந்தால் மட்டுமே முழுமையாக துறை சார்ந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.