ராமேசுவரம் மீனவர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஆரம்பமாகியிருக்கிறது.. இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் பல வருடங்களாகவே நடந்து வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும், இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் உள்ளிட்ட 131 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல இந்த மீனவர்களின் 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 470க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் அனுமதி டோக்கன் பெற்று 3000-க்கும் அதிகமான மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள்.. இரவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அந்த பகுதிக்கு ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்தனர். இதில் 5 விசைப்படகுகளை விரட்டிப் பிடித்து, அதில் இருந்த 32 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மீனவர்களிடத்தில் அச்சத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
இதனிடையே, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்தும், கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரியும், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இன்றையதினம் காலவரையற்ற போராட்டத்தை ராமேஸ்வர மீனவர்கள் துவங்கியிருக்கிறார்கள்.. இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கை கடற்படையை கண்டித்தும் ராமேசுவரத்தில் மீனவர்கள் இன்று முதல் இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.. இதனால், 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் படகுகளைக் கரையோரம் நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.. இந்த வேலை நிறுத்தத்தினால், 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தினமும் 1 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.