“யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. தமிழக மாணவர்கள் பின்தங்குகிறார்கள். இதற்கு திமுக, அதிமுகவின் மொழிக் கொள்கைகள் தான் காரணம்” என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று (பிப்.24 )டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:-
தமிழகத்தில் 69 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக திமுக, அதிமுக பெருமை பேசுகின்றன. பிற்படுத்தப்பட்டோருக்கு பாதிப்பு வந்தபிறகு 9-வது அட்டவணையில் சேர்க்கக் கூடிய அளவுக்கு முயற்சி எடுத்தவர்கள், தமிழகத்தில் ஏறக்குறைய 20 மாவட்டங்களில் வாழக்கூடிய தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கான இட ஒதுக்கீட்டையும், வட தமிழகத்தில் வாழக்கூடிய பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டையும் 3 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடிய ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட ஆதி ஆந்திரர்களுக்கும் கடந்த 15 ஆண்டுகளாக 18 சதவிகித இட ஒதுக்கீடும் வழங்கக் கூடிய அநீதி நடக்கிறது.
இந்த 3 சதவிகித இட ஒதுக்கீட்டை தனியே கொடுத்துவிடுங்கள் என தமிழக அரசுக்கு நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால், திமுகவும், அதிமுகவும் இதை கேட்பதாக இல்லை. அமைதியாக மிகப் பெரிய அநீதி நடக்கிறது. இதற்காக நாங்கள் மாவட்டம் தோறும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துகிறோம். விரைவில் மாநில அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.
புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வரும் டிசம்பர் 27-ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவர்கள். அங்கு உள்ள மலைவாழ் மக்களை வெளியேற்றுவது என்பது சரியானது இல்லை. ஒரு மொழியை கற்கக் கூடாது என கூறுவவதற்கு மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை.
தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில்தான் மாநில கல்விக் கொள்கையும் வகுக்கப்பட வேண்டும். விரோதமாக இருக்கக் கூடாது. இங்கு எந்தவிதமான மொழி திணிப்பும் இல்லை. சாதி, மதம், இனம், மொழி ரீதியாக வேறுபாடு காட்டக் கூடாது. மும்மொழி எனக் கூறுவது ஏழை, எளிய மக்கள் பயிலக் கூடிய அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களிடம் தான் திமுகவினர் திணிக்கிறார்கள். வசதி படைத்த பள்ளி பற்றி இவர்கள் கூறுவது இல்லை. ஏழை மக்களின் குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்க மறுப்பது எந்த விபத்தில் நியாயம், தர்மம்.
இந்தியை யாரும் திணிப்பதில்லை. மத்திய அரசு பாடத் திட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும்தான் மாணவர்களுக்கு இந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன்பிறகு கிடையாது. மற்ற பள்ளிகளில் இந்தி படிக்கும் வாய்ப்பு இருக்கும்போது, திமுக விடாப்படியாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பது சட்டவிரோதம். பல மொழிகளை கற்றுக் கொடுப்பதன்மூலம் தான் வாய்ப்புகள் நிறையக் கிடைக்கும். திமுக தனது கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுயாராவது நீதிமன்றத்துக்குச் சென்றால் திமுக அரசை கலைக்கக் கூடிய சூழ்நிலை கூட உருவாகலாம்.
இதே நிலை நீடித்தால் 2026 வரை திமுக ஆட்சியில் இருக்காது என்றே நான் கருதுகிறேன். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கூறுவதும் தவறு. பல திறன்களை வளர்த்துக்கொண்டால்தான் வளர முடியும். ஏழை குழந்தைகளின் வாழ்க்கையோடு திமுக விளையாடக் கூடாது. இதுபோன்ற காரணங்களால்தான் யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழகத்தின் பங்கு குறைகிறது. தமிழக மாணவர்கள் பின்தங்குகிறார்கள். இதற்கு திமுக, அதிமுகவின் மொழிக் கொள்கைகள் தான் காரணம். கல்வியை வைத்து திமுக அரசியல் சித்து விளையாட்டு விளையாடக் கூடாது.
விருதுநகர் மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளை நடக்கிறது. மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. பட்டாசு விபத்துகளுக்கு தீர்வுகாண முடியவில்லை. தொழில் பூங்கா வரவில்லை. மிஞ்சியுள்ளது கனிமவளக் கொள்ளை மட்டுமே. இது தொடர்பாக, கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த நினைக்கும் அரசியல் கட்சிகளை இணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.