தமிழர்கள் என்றால் மத்திய அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது: செல்வப்பெருந்தகை!

வழக்கறிஞர் சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த முயற்சிப்பதன் மூலம் தமிழர்கள் என்றால் மத்திய அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்து உள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வழக்கறிஞர்கள் (திருத்த) சட்ட வரைவு 2025 மூலம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் பெயரை ‘மெட்ராஸ் பார் கவுன்சில்’ என மாற்றத் துடிக்கின்றது ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு. பல்வேறு சட்டவரைவு திருத்தங்கள் செய்து, மாநில அங்கீகாரத்தை முற்றிலும் நீக்கி, அதிகாரத்தை தன்னிடமே குவிக்க முயற்சிக்கிறது பா.ஜ.க. அரசு. எங்கெல்லாம் தமிழ்நாடு என்றிருக்கிறதோ அதையெல்லாம் மாற்ற நினைக்கிறது ஒன்றிய அரசு.

சட்டவரைவு திருத்தங்கள் செய்வதன் மூலம் தமிழ், தமிழர்கள் என்றால் ஒன்றிய பாஜக அரசுக்கு உள்ள வெறுப்பையே காட்டுகிறது. தமிழ் மொழியையும், தமிழர்களையும் ஒடுக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மிக வன்மையாக கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.