சொந்த குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொன்ற கேரள இளைஞன்!

கேரளாவில் நேற்று அசால்டாக போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டதாகக் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தனது காதலி, பாட்டி உட்பட 5 பேரை நேற்று ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இளைஞன் ஒருவன், தனது குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துள்ளார். கேரளா இளைஞர் கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்று திங்களன்று 23 வயது இளைஞன் ஒருவன் வழக்கம் போல் சாதாரணமாக போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்துள்ளான். அவர் ஏதோ புகார் அளிக்க வந்திருப்பார் என்றே அங்கிருந்த போலீஸ்காரர்கள் கருதினர். ஆனால், அவர் வாயைத் திறந்து பேச ஆரம்பித்ததும் சொன்ன தகவல்கள் ஒவ்வொன்றும் அதிர வைப்பதாக இருந்தது. அதாவது தனது தாய், டீனேஜ் சகோதரர் மற்றும் காதலி உட்பட 6 பேரைக் கொன்றதாகக் கூறிய அவர் அதிர்ச்சி அளித்துள்ளார். அவர் இவ்வளவு மோசமான படுகொலையைச் செய்ததாக அவரே வாக்குமூலமும் அளித்திருக்கிறார். அந்த நபர் கூறியதில் இதுவரை 5 பேர் உயிரிழந்து இருப்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.

நேற்று திங்கள்கிழமை மாலை மூன்று வெவ்வேறு இடங்களில் இந்த கொலைகள் நடந்துள்ளன. சில மணி நேர இடைவெளியில் அந்த நபர் ஒவ்வொரு இடத்திற்கும் நேரடியாகச் சென்று கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அஃபான் என்ற அந்த இளைஞர், காவல் நிலையத்தில் சரணடைந்து வாக்குமூலம் அளித்தபோதே இந்தச் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது. அவர் தனது குடும்பத்தினர் அனைவரையும் கொன்றதாக வாக்குமூலம் அளித்தார். அவர் முதலில் மனநல பாதிப்பு காரணமாக இதுபோல கூறலாம் என்று போலீசார் கருதினர். ஆனால், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் மேலும் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாகவே இருந்தது.

குடும்பத்தினர் கொலை வாக்குமூலம் அளித்த அந்த நபரின் 13 வயது சகோதரர் அஹாசன், பாட்டி சல்மா பீவி, தந்தைவழி மாமா லத்தீப், அத்தை ஷாஹிஹா மற்றும் அவரது காதலி ஃபர்ஷானா ஆகியோர் உயிரிழந்துள்ளதை கேரள போலீசார் உறுதி செய்துள்ளனர். அஃபானின் தாய் ஆபத்தான நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், தானும் விஷம் அருந்திவிட்டதாக அஃபான் போலீசாரிடம் வாக்குமூலமாக அளித்துள்ளார்.. இதையடுத்து, உடனடியாக அவரையும் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அதேநேரம் கொலைக்கான காரணத்தை அஃபான் இதுவரை கூறவில்லை. இதையடுத்து இந்த படுகொலை குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியுள்ளனர். வெறும் சில மணி நேரத்தில் 5 பேர் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.