எனக்கு பாஜக 18 கோடி கடன் தள்ளுபடி செய்ததா?: பிரீத்தி ஜிந்தா கண்டனம்!

நடிகை பிரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள பக்கங்களை பாஜகவுக்கு வழங்கியதால் அவருக்கு பாஜக ரூ.18 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது என்று கேரள மாநில காங்கிரஸ் கட்சி பதிவிட்டுள்ளது. இதனால் கொதித்துப்போன பிரீத்தி ஜிந்தா போலி செய்திகளை பரப்பும் உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் என்று கடுமையா விமர்சனம் செய்துள்ளார்.

இந்தி உள்பட பல்வேறு மொழிப்படங்களில் நடித்து வருபவர் நடிகை பிரீத்தி ஜிந்தா. இவர் ஐபிஎல்லில் பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் உள்ளார். இதனால் பிரீத்தி ஜிந்தாவுக்கு நம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது வரை எந்த கட்சிக்கும் ஆதரவாக செயல்படவில்லை. இப்படியான சூழலில் தான் காங்கிரஸ் கட்சி அவர் மீது பாஜகவை தொடர்புப்படுத்தி திடுக்கிட வைக்கும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதனால் பிரீத்தி ஜிந்தா கொதித்துப்போய் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது காங்கிரஸ் கட்சியின் கேரள மாநில அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் நேற்று ஒரு பதிவு செய்யப்பட்டு இருந்தது. அதில், நியூ இந்தியா கூட்டுறவு வங்கியில் பிரீத்தி ஜிந்தா உள்பட மற்றவர்களின் ரூ.18 கோடி கடன் என்பது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று வெளியாகி இருந்த செய்தி ஒன்று இணைக்கப்பட்டு இருந்தது. இதனை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கேரள மாநில காங்கிரஸ் கட்சி, ‛‛அவர் (பிரீத்தி ஜிந்தா) தனது சமூக வலைதள கணக்குகளை பாஜகவிடம் கொடுத்து ரூ.18 கோடி கடன் தள்ளுபடியை பெற்றுள்ளார். இப்போது அந்த வங்கி கடந்த மாதம் சிதைந்து விட்டது. முதலீட்டாளர்கள் தங்களின் பணத்துக்காக தெருவில் நிற்கின்றனர்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை பார்த்த பிரீத்தி ஜிந்தா கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். கேரளா மாநில காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்ட அந்த பதிவுக்கு அவர் பதிலளித்தார். இதுதொடர்பாக பிரீத்தி ஜிந்தா, ‛‛இல்லை, நான் எனது சமூக வலைதள பக்கங்களை நானே தான் நிர்வகித்து வருகிறேன். பொய்யான செய்தியை பரப்பும் உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன். யாரும் எனக்கான கடனை தள்ளுபடி செய்யவில்லை. அரசியல் கட்சிகளும், அதன் பிரமுகர்களும் எனது பெயர், போட்டோக்களை பயன்படுத்தி தவறான செய்திகளை புரோமோட் செய்வது, கவனம் ஈர்ப்பதற்காக தவறான தகவல்களுடன் செய்திகளை பரப்புவதை நினைத்து அதிர்ச்சியடைக்கிறேன். தகவலுக்காக ஒன்றை சொல்கிறேன். வாங்கப்பட்ட கடன் முழுமையாக 10 ஆண்டுகளுக்கு முன்பே செலுத்தப்பட்டு விட்டது. இது உங்களை தெளிவுப்படுத்தி இருக்கும்.அதேபோல் எதிர்காலத்தில் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்க உதவும் என்று நம்புகிறேன்” என காட்டமாக கூறியுள்ளார்.

இந்தபதிவை தொடர்ந்து கேரளா காங்கிரஸ் பிரீத்தி ஜிந்தாவிடம், ‛‛நாங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை ஏற்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளது.