மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைத்து நம் உரிமைகளை இன்னும் வேகமாக நசுக்க நினைக்கும், ஒன்றிய பாசிச பாஜக அரசின் சூழ்ச்சியை வீழ்த்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள்வோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றோம். இக்கூட்டத்தின் போது, 2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பற்றி ஆலோசிக்கப்பட்டு, வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டுக்கு ஏற்பளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமைகளை நசுக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்படுத்தத் துடிக்கும், நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு திட்டத்தின் ஆபத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பினால் ஏற்படக்கூடிய பாதகங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினையாக உருவெடுத்துள்ள இத்திட்டத்தை முறியடிப்பதற்கான செயல்திட்டங்களை உருவாக்கிட, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை வரும் மார்ச் 5 அன்று கூட்டுவது என்று நம் முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தை குறைத்து நம் உரிமைகளை இன்னும் வேகமாக நசுக்க நினைக்கும், ஒன்றிய பாசிச பாஜக அரசின் சூழ்ச்சியை வீழ்த்த தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள்வோம்! தமிழ்நாடு காப்போம்!. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
இந்தியாவின் அடிப்படை கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் நோக்கில் ஒவ்வொரு அடியையும் முன்னகர்த்தி வரும் பாஜகவின் நீண்ட கால செயல்திட்டம்தான் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு.
பல ஆண்டுகளாக மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கும் வகையில், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்து தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது ஆளும் மத்திய பாஜக அரசு. மத்திய அரசின் இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து நமது முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.