500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால்விடுகிறார் எச். ராஜா.. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை.. என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் கூறியுள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்விக்கான நிதி தருவோம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் படி, மும்மொழியை ஏற்றால் மட்டுமே நிதி கிடைக்கும் என்பதால் இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதை இந்தி திணிப்பு என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகிறது.ரயில் நிலையங்கள், தபால் நிலையங்கள், மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மை ஊற்றி அழிக்கும் போராட்டத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் முன்னெடுத்துள்ளன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் திமுகவினர் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். ரயில் நிலைய பெயர் பலகையில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் மீது மட்டும் கறுப்பு பெயின்ட் பூசி அழித்துள்ளனர். இதேபோல் திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையிலும் ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் கருப்பு மை ஊற்றி சிலர் அழித்தனர். இதேபோல் பல்வேறு தபால் நிலையங்களிலும் கருப்பு மை ஊற்றி அழித்தனர்.
இதனிடையே திமுகவிற்கு பதிலடியாக, எச். ராஜா, “500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை முதலில் அழியுங்கள்; பார்க்கலாம்!” என்று சவால் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தியை அழிக்க வேண்டும் என்றால், முதலில் சன் ஷைன் ஸ்கூலுக்கே போக வேண்டும். திமுகவில் உள்ளவர்கள் ஒருவராவது உப்பு போட்டு சாப்பிடுகிறவர் இருந்தால், முதலில் அந்த பள்ளிக்கு செல்லுங்கள். திமுகவில் மொத்தம் 48 சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளின் பட்டியலை நான் கொடுக்கிறேன். அந்த பள்ளிகளில் ஹிந்தி கற்று கொடுக்கலாமா என்று போராட்டம் நடத்துங்கள். முடிந்தால், 500 ரூபாய் நோட்டுகளில் உள்ள இந்திய எழுத்துக்களை அழியுங்கள். நீங்கள் மானங்கெட்டவர்கள்!” இவ்வாறு எச். ராஜா ஆவேசமாக கூறினார்.
இந்நிலையில் எச். ராஜாவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும் மதுரை எம்பியுமான சு வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “500 ரூபாய் நோட்டில் உள்ள இந்தியை அழியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறார் எச். ராஜா.. ரூபாய் நோட்டில் 8 ஆவது அட்டவணை மொழிகள் அனைத்தும் உண்டு. சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல.. காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்.. அது தான் அறிவுடமை” என்று கூறியுள்ளார்.