6 மாதங்களில் ஏக்நாத் ஷிண்டே அரசு கவிழும்: சரத் பவார்

மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு 6 மாதங்களில் கவிழும் என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை இழந்தது. இதை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்வதாக, உத்தவ் தாக்கரே அறிவித்தார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி பாஜக ஆதரவுடன், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் பதவியேற்றார்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பெரும்பான்மைக்கு 144 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், 164 வாக்குகள் பெற்று, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு வெற்றி பெற்றது.

இதற்கிடையே நேற்று, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், “மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசாங்கம் அடுத்த ஆறு மாதங்களில் கவிழக்கூடும். எனவே இடைத்தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஏக்நாத் ஷிண்டேவை ஆதரிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தற்போதைய ஏற்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர் எனவும், அமைச்சர்களுக்கு துறைகள் பகிர்ந்து அளிக்கப்பட்ட பின்பு இந்த அதிருப்தி வெளியில் தெரிய வரும் எனவும் சரத் பவார் கூறியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அதிருப்தி மகாராஷ்டிர அரசு கவிழவே வழிவகை செய்யும் எனவும், ஆறு மாதங்களுக்குள் ஆட்சி கவிழ்ந்து இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் அதிக நேரம் செலவிட வேண்டும் எனவும் சரத் பவார் அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.