பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார்?: ராகுல் காந்தி

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமரிசித்துள்ளார்.

நாடு முழுவதும் பொருள்களுக்கு ஒரே வரியாக சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி)யை மத்திய அரசு கடந்த 2017ல் அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியுடன் 5 ஆண்டுகளை ஜிஎஸ்டி நிறைவு செய்த நிலையில், மத்திய பாஜக அரசு அதனைக் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஜிஎஸ்டி குறித்து மத்திய அரசை கடுமையாக விமரிசித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“மருத்துவக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி: 18%
மருத்துவமனை அறை மீதான ஜிஎஸ்டி: 5%
வைரங்கள் மீதான ஜிஎஸ்டி: 1.5%

பிரதமர் யார் மீது அக்கறை காட்டுகிறார் என்பதை மிகுந்த வலியுடன் நினைவூட்டுவதே ஜிஎஸ்டி எனும் கப்பர் சிங் வரி(Gabbar Singh Tax). ஒற்றை மற்றும் குறைந்த ஜிஎஸ்டி விகிதமே இணக்கச் செலவுகளைக் குறைக்கும், அரசு தனக்கு பிடித்தவற்றில் விளையாடுவதைத் தடுக்கும், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சுமையை எளிதாக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.