நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்!

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் வட மாநிலங்களுக்கு கூடுதல் தொகுதி கிடைக்கும் என்றும், தென் மாநிலங்களுக்கான எம்பி தொகுதிகள் குறைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. தேசிய அளவில் இந்த விவகாரம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க கூடாது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-

தொகுதி சீரமைப்பு நடத்தி நாடாளுமன்றத் தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டால், தமிழ்நாடு வஞ்சிக்கப்படும். நாம் இருவர், நமக்கு இருவர் போன்ற திட்டங்களை சிறப்பாக பின் தொடர்ந்த மாநில தமிழ்நாடு. தென் மாநிலங்கள் பெரும்பாலும் மக்கள் தொகை குறைப்பு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால் இப்போது மக்கள் தொகை அடிப்படை நாடாளுமன்றத் தொகுதிகள் நிர்ணயம் செய்தால், தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறையும். ஏற்கனவே நமக்கு பிரதிநிதித்துவம் குறைந்துதான் உள்ளது.

தேசிய அளவில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் 80 தொகுதிகள் உள்ளது. ஆனால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியை சேர்த்தால் மட்டுமே 40 தொகுதிகள் வரும். ஆனால் மக்கள் தொகுதி அடிப்படையில் நிர்ணயித்தால் 3க்கு ஒரு பங்கு என்று தமிழ்நாடு வஞ்சிக்கப்படும். ஏற்கனவே நம் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதே கிடையாது. வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

மக்கள் தொகுதி அடிப்படையில் செய்தால், அவர்கள் வடமாநிலங்கள் மட்டுமே பிரச்சாரம் செய்தாலே போதும். தென் மாநிலங்களில் பிரச்சாரம் செய்யவே தேவையில்லை. இந்தியாவை ஆட்சி செய்வதற்கு வடமாநிலங்களில் வென்றாலே போதும் என்ற நிலை வரும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்நாடும் ஏற்றுக் கொள்ள கூடாது. ஆனால் அதிகளவில் நாடாளுமன்ற தொகுதிகளை உருவாக்கி, அதே அளவிலான பங்கீட்டை தொடர்வோம் என்று கூறி இருக்கிறார். தற்போது 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதற்கே கருத்தை பதிவு செய்ய நேரம் இல்லை. இதனை 888ஆக உயர்த்த போகிறார்களாம். அப்படி பார்த்தால் 340 பேர் அதிகரிப்பார்கள். அவர்கள் பேசுவதற்கும், கருத்தை பதிவு செய்வதும் குறைந்துவிடும். கருத்தை பதிவு செய்யவே முடியாது. இவ்வளவு பெரிய நாடாளுமன்றம் இருந்தால், அது சீனாவை போல் விவாத மேடை இல்லாமல் போய்விடும். பெரிய நாடாளுமன்றம் வருவதால், இந்திய ஜனநாயகமோ அல்லது திட்டங்களோ அடிமட்டம் அளவிற்கு மக்களை சென்றடையும் என்று நம்பிக்கை இல்லை. அதனால் நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க கூடாது. இதனை தமிழ்நாட்டில் பாஜகவை தவிர்த்து வேறு யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.