கருணாநிதி மகனா, பிரபாகரன் மகனா என களத்தில் பார்த்துடலாம்: சீமான்!

கருணாநிதியின் மகனா, இல்லை இந்த பிரபாகரனின் மகனா என்பதை 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் களத்தில் பார்த்துவிடலாம் என முதல்வர் ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.

நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதும் அது கிழிக்கப்பட்டுள்ளதும் பெரும் சர்ச்சையாகிவிட்டது. இது குறித்து தருமபுரியில் உள்ள சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நான் சென்னையில் இல்லை என்பது போலீஸாருக்கு தெரியும். அப்படி இருந்தும் சம்மன் கொடுக்க என் வீட்டுக்கு சென்றார்கள். அங்கு என் மனைவி இருந்தாரே, அவரிடம் கொடுத்திருக்கலாமே, அதை விட்டுவிட்டு கேட்டில் ஏன் சம்மனை ஒட்ட வேண்டும்? அந்த சம்மன் நான் பார்ப்பதற்கா இல்லை ஊரே பார்ப்பதற்கா? பெங்களூரில் ஒரு நடிகையை தேடி சென்று போலீஸாரால் சம்மன் கொடுக்க முடியும் போது என்னை தேடி ஓசூருக்கு வந்து சம்மன் கொடுத்திருக்கலாமே! என்ன செய்தாலும் என்னை அடக்க முடியவில்லை. அதனால் அந்த பெண்ணை அழைத்து வந்து திமுக அரசு இது போல் வீண் பழி போடுகிறார்கள்.

இப்போதும் சொல்கிறேன், ஓட்டுக்கு காசு கொடுக்காமல் இத்தனை ஓட்டு வாங்கியிருக்கும் நான்தான் பெரிய தலைவன். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் யார் என பார்த்துவிடலாம். கருணாநிதி மகனா, இல்லை பிரபாகரன் மகனா, தமிழா, திராவிடமா என்பதை 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் களத்தில் பார்த்துவிடலாம். இது போல் என்னை மிரட்டினால் நான் பயந்துவிடுவேனா, உங்கள் அப்பா என்னை ஒரு ஆண்டுக்கு ஜெயிலில் வைத்திருந்தார். நான் பயந்துட்டேனா.. என்னை பார்த்தால் பயப்படுற மாதிரியா தெரிகிறது?

அந்த காவல் துறை ஆய்வாளர் பிரவீனை எனக்கு நன்றாக தெரியும். அவருடைய தந்தை, ராஜீவ் காந்தி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்துவிட்டால் அதற்காக என்னை பழிவாங்குவதா? 234 தொகுதிகளிலும் 2026 ஆம் ஆண்டு திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா, 5 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் வரும், ஆட்சி மாறும் என்பதை காவல் துறையின் மனதில் வைக்க வேண்டும். எங்கள் வீட்டு காவலாளியை அடித்து இழுத்துச் செல்லும் அளவிற்கு என்ன நடந்தது. விசாரணைக்கு வரமாட்டேன் என நான் சொல்லவே இல்லை. எனக்கு மார்ச் 8ஆம் தேதி வரை நிகழ்ச்சிகள் இருப்பதால் அதன் பிறகு வருகிறேன் என்றுதான் சொன்னேன். சம்மன் கொடுத்தவுடன் வந்துவிட முடியுமா, எனக்கு நேரம் கிடைக்கும் போதுதானே வர முடியும். இன்று ஆஜராவேனா என கேட்கிறீர்களா, (என்னப்பா ஆஜராகலாமா என தொண்டர்களிடம் கேட்டு வழக்கமான சிரிப்பை சிரிக்கிறார் சீமான்). மேலும் சீமான் தொடர்கையில், இன்று நான் வருவதற்கு மாலை 6 அல்லது 6.30 மணி ஆகிவிடும். எனவே இன்று ஆஜராவேன்.

ஒரு நடிகை, ஒரு பெண் சொன்னாலே அது குற்றம் ஆகிவிடுமா. ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லலாம். ஆனால் புகார் கூறிவிட்டாலே குற்றவாளி என முத்திரை குத்திவிடுவதா? எனக்கு திருமணம் ஆகும்போது அதை அந்த நடிகை நிறுத்தி இருக்கலாம். எனக்கும் அவருக்கும் திருமணமாகியிருக்கிறது என்றால் அதற்கு ஆதாரம் எங்கே? நான் அவருக்கு 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்தேனாம். அப்படியென்றால் ஒரே ஆண்டில் 7 முறை கருக்கலைப்பு செய்த சாதனையாளன் நான்தான். அதுவும் சிறையில் இருந்தபடியே கட்டாய கருக்கலைப்பு செய்ய முடியுமா? நானே தெருக்கோடியில் நின்னுக்கிட்டு இருக்கேன். இதுல நடிகைக்கு கொடுக்க என்கிட்ட எங்க 2 கோடி ரூபாய் இருக்கு? ஒரு முறை வாழறதுக்கு வழியில்லை, நான் இறந்துடுவேன், எனக்கு உதவி செய்ங்கன்னு ஒரு ஆடியோவை நடிகை 15 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பியிருந்தார். அது கூட எனக்கு அனுப்பவில்லை. என் வீட்டில் வேலை செய்த ஒருவர் மூலமாக உதவி கேட்டார். அதனால்தான் மாதம் ரூ 50 ஆயிரம் என 2- 3 மாதங்களுக்கு கொடுக்குமாறு உதவினேன். அந்த ஆடியோவை நீங்கள் கேட்டால் உங்களுக்கும் உதவ வேண்டும் என தோன்றும். அந்த அளவுக்கு அவர் அழுதபடியே பேசினார். உதவி என கேட்டால் கொடுத்து தொலைக்க வேண்டியதுதான். மற்றபடி அவருக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு சீமான் கூறினார்.