காவிரி மற்றும் தென்பெண்ணையாறு பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த கர்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
கர்நாடக துணை முதல்வரும், நீர்ப்பாசனத் துறை அமைச்சருமான சிவக்குமார், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘மேகதாட்டு அணை குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திட வேண்டும். கர்நாடகாவின் ரூ.11 ஆயிரம் கோடி மதிப்பிலான நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலுடன் பலமுறை பேசி உள்ளேன். மத்திய அரசு இதில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதில் ஏற்படும் தாமதத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மேகதாட்டு அணை உள்ளிட்ட இந்த திட்டங்களை எவ்வகையிலும் அமல்படுத்த உறுதி கொண்டு உள்ளோம். தென்பெண்ணை ஆறு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்கவேண்டும். வேறு எந்தவழி காட்டலையும் ஏற்க மாட்டோம்’’ எனக் கூறி உள்ளார்.
ஒரு பக்கம் பெங்களூரு மக்களை திருப்திப்படுத்தவும், மறுபக்கம் மத்திய அமைச்சரை எச்சரிக்கும் முறையிலும் ஒட்டுமொத்தமாக தமிழகத்துக்கு எதிரான துரோக நிலைபாட்டையும் வலியுறுத்தி உள்ளார். இந்த இரண்டு பிரச்சினைகளுமே உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ளவையாகும். எனவே அவர் நீதிமன்றத்துக்கும் எச்சரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
மேகதாட்டு அணை கட்டுமான வரைவு அறிக்கையை, அனுமதிக்காக மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியபோது, மத்திய சுற்றுச்சூழல் துறை இதற்கான விரிவான அறிக்கை கேட்டிருந்ததை தமிழக அரசு எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. தமிழக விவசாயிகள் சங்கங்களும் ஆட்சேபம் தெரிவித்ததால்தான் மத்திய அரசு அதை திரும்பப் பெற நேர்ந்தது. மேகதாட்டு அணைக்கு எதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில், மத்திய அரசை வைத்து தமிழக மக்களை வஞ்சிக்க நினைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.