பழங்குடி மக்களான மீனவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை: காளியம்மாள்!

தமிழ்நாட்டின் கடலோடி தொல் பழங்குடி மக்களான மீனவர்களுக்கு அரசியல் அதிகாரம் தேவை; மீனவர்கள் பிரச்சனையை பேச ராஜ்யசபா, மக்களவையில் எங்களுக்கான பிரதிநிதிகள் யாரும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் வேதனை தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை விட்டு வெளியேறிய காளியம்மாள் நேற்று திருச்செந்தூர், ராமேஸ்வரம் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் காளியம்மாள் கூறியதாவது:-

எங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளாகத்தான் பார்க்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை தமிழர்களை ஒரு ஓரமாக ஒதுக்கிவிடுவர். தமிழர்களைப் பொறுத்தவரை கடலோர மக்களை ஒரு ஓரமாக ஒதுக்கி வைப்பர். எங்களுக்கான அரசியல் பங்கேற்பு எதுவும் இல்லை. ராஜ்யசபாவில் எங்களுக்கு என பேசுவதற்கு ஆள் இல்லை; மக்களவையில் எங்களுடைய பிரச்சனையை பேசுவதற்கு ஆள் இல்லை. கடலோர மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் உள்ளிட்டவைகளை யாரை கேட்டு உருவாக்குறீங்க? தேசிய மீன்வளக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கி இருக்கிறது. அங்கே யாருடன் விவாதிக்கப்பட்டது? எந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.. இந்த தேசிய மீன்வளக் கொள்கை என்பது யாருக்காக உருவாக்கப்பட்டுள்ளது? இன்னொரு பக்கம், தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தைத் திருத்தம் செய்கின்றனர். அதை யாரைக் கேட்டு திருத்தினீங்க? யார்கிட்ட கேட்டீங்க? மீன் பிடிக்கப் போறது நானு.. மீன்பிடிக்க போறது என்னுடைய கடற்கரை இனம்.

கேரளாவில் இருக்கிற மீனவர்கள் கடலுக்கே பட்டா கேட்கின்றனர்.. ஆனால் தமிழ்நாட்டு மீனவர்களாகிய நாங்கள் வாழும் நிலத்துக்கே பட்டா இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.. அப்ப உண்மையிலேயே மாற்றாந்தாய் பிள்ளையாக கூட நாங்கள் நடத்தப்படவில்லை. ஏதிலிகளாக நடத்தப்படுகிறோம். எங்களுக்கு எந்த உரிமையும் சலுகையும் இல்லை. குறைந்தபட்சம் மீன்வளத்துறை அமைச்சர் என்பது கூட எங்களுக்கு இல்லை. எங்கள் மீனவர்கள் பிரச்சனையை யார் பேசுவது? யார் சரி செய்வது? அரசியல் பங்கேற்ற, அரசியல் அதிகாரம் பற்ற ஒரு தாயை இழந்த பிள்ளையாக மீனவர்கள் இருக்கிறோம். உங்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்துவிட்டு எங்களுக்கான உரிமையைக் கூட பெற முடியாத நிலைமையில் இருக்கிறோம்.

என்னுடைய வீட்டுக்காரர் இலங்கை சிறையில் இருந்து வந்த பின்னர் 60 நாட்கள் மருத்துவ சிகிச்சை கொடுத்தேன். காரப்பொடியைத்தான் குழம்பாக சாப்பிடுவதற்கு தருவர்.. 60 நாட்கள், 120 நாட்கள் 3 வேளையும் இந்த உணவை சாப்பிடத்தான் முடியுமா? இந்த 60 நாளும் நாங்கபட்ட வேதனை இருக்கிறதே.. என் பிள்ளை காலையில் எழுந்த உடன் அப்பா எங்கே என கேட்கும்? அதேபோன்ற நிலைமைதான் இந்த ராமேஸ்வரத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும்.. நாங்க என்னதான் பாவம் செய்தோம். கடலோடியாக பிறந்ததே ஒரு குற்றமா? கடல் சமூகத்தில் தொல்குடி மக்களாக பிறந்தது ஒரு குற்றமா?

எங்களுடைய கச்சத்தீவை கொடுத்துவிட்டு அந்த எங்கள் நிலத்துக்கு நாங்கள் போனால்.. அத்துமீறி உள்ளே நுழைந்துவிட்டதாக சொல்கிறீர்கள். இந்த பார்டர் லைனை யாரை கேட்டுக் கொண்டு போட்டீர்கள்? எங்களுக்கான நிலத்தை கூறு போடுவது குறித்து இந்திய அரசும், இலங்கை அரசும் உட்கார்ந்து பேசுவதா? எங்களை ஏன் அதில் உள் பங்கீடாக வைக்கவில்லை? எங்களுக்கான பிரதிநிதித்துவம் என்பதற்காக எங்களை உட்கார வைத்திருக்க வேண்டும்தானே? யாரை கேட்டு எல்லைக் கோடு போட்டீங்க? இந்த எல்லைக் கோடு யாரால் வரையறுக்கப்பட்டது? அந்த அதிகாரிகளை அழைத்துவாருங்க.. இந்த எல்லைக் கோடு எப்படிப் போடப்பட்டது என நாங்கள் கேட்கிறோம். இவ்வாறு காளியம்மாள் பேசினார்.