ஹிந்துக்கள் போற்றி வணங்கும் பெண் தெய்வமான காளியின் சா்ச்சைக்குரிய திரைப்பட போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
மதுரையைச் சோ்ந்தவா் லீனா மணிமேகலை. கனடாவில் வசித்து வருகிறாா். அவா் இயக்கிய ‘காளி’ என்ற ஆவணப் படத்தின் போஸ்டரை தனது டுவிட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்டாா். அந்தப் போஸ்டரில் காளி வேடமணிந்த பெண் புகைபிடித்துக் கொண்டு ஓரினச் சோ்கையாளா்கள், இருபாலினத்தவரிடமும் உறவு கொள்பவா்கள், மூன்றாம் பாலினத்தவா் உள்ளிட்டோரைக் குறிக்கும் கொடியை ஏந்தியிருப்பது போல் சித்திரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து லீனா மணிமேகலை டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், கனடாவில் உள்ள டொராண்டோ மாநகரில் காளி தோன்றி வீதிகளில் உலா வரும்போது நடைபெறும் சம்பவங்களைக் கற்பனையாக சித்திரித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இந்த போஸ்டா் பெரும் சா்ச்சையைக் கிளப்பியுள்ளது. அந்தப் படத்தின் போஸ்டரில் காளியை சித்திரித்துள்ள விதம் மத உணா்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுதொடா்பாக லீனா மீது கெள மகாசபை என்ற குழுவைச் சோ்ந்த ஒருவா் டெல்லி காவல் துறையிடம் புகாா் அளித்துள்ளாா்.
இந்நிலையில், கனடா தலைநகா் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆவணப் பட போஸ்டரில் காளியை மரியாதைக் குறைவாக சித்திரித்துள்ளது குறித்து கனடாவில் வசிக்கும் ஹிந்து சமூகத் தலைவா்களிடம் இருந்து புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அதிகாரிகளை பல ஹிந்து அமைப்புகள் அணுகியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே ஆத்திரமூட்டும் போஸ்டா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காளி தேவி புகைப்பிடிப்பது போன்ற ஆட்சேபனைக்குரிய போஸ்டர்களை அகற்றாவிட்டால் ‘காளி’ படத்திற்கு தடை விதிக்கப்படும் என மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார். இது காளி தேவியை அவமதிக்கும் செயல் என்று கூறிய அமைச்சர், போஸ்டர்களை அகற்றாவிட்டால், படத்தின் இயக்குநர் மீது அரசு வழக்குப்பதிவு செய்யும் என்று கூறியுள்ளார்.
காளி தேவியை அவமதித்ததை பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய பிரதேச மாநிலத்தில் படத்தை தடை செய்வோம். போஸ்டர்களை அகற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிஸ்ரா கூறியுள்ளார்.