கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது கார்ப்பரேட்டாக மாறிவிட்டன: சீமான்!

கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது கார்ப்பரேட்டாக மாறிவிட்டன. திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்குச் செல்லமாட்டோம் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

மதுரையில் சீமான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

என் மீது பெங்களூரு பெண் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்த வழக்கு ஆதாரமில்லாத அவதூறு வழக்கு. நீண்ட நாட்களாக இருந்துவரும் ஒரு தொல்லை அது. இவ்வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது கார்ப்பரேட்டாக மாறிவிட்டன. என் மீதான வழக்கு பற்றி பேசுகின்றனர். பொள்ளாச்சி பாலியல் சம்பவம், பள்ளி மாணவி மரணம் உள்ளிட்ட வழக்குகள் குறித்து கம்யூனிஸ்ட்கள் ஏன் பேசவில்லை? மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் மீது மிகுந்த மதிப்பு உள்ளது. எனக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் உங்களது நோக்கமா? ஜீவானந்தம், சங்கரய்யா போன்றோருடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் செத்துப்போய் விட்டன.

எம்ஜிஆர் ,ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது பெற்ற வாக்கு சதவீதத்தை கம்யூனிஸ்ட் கட்சிகள் இப்போது பெற முடியவில்லை. கம்யூனிஸ்ட் தலைவர்களை எனக்குப் பிடிக்கும். ஆனால் அவர்களது செயல்பாடுகள் பிடிக்கவில்லை. மும்மொழிக் கொள்கையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுகிறது.

என் மீது வழக்குத் தொடர்ந்த பெண், எனது தாயாரை மட்டுமி்ன்றி குறிப்பாக 15 ஆண்டுகளாக எனது குடும்பப் பெண்களைத் திட்டும்போது தாங்கிக் கொண்டே வருகிறேன். எவ்வளவு நாள்தான் இந்த அழுக்கைச் சுமந்து கொண்டிருப்பது. அதற்கு ஒரு முடிவு கட்டவே வேறு வழியின்றி என் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்ய நான் வழக்குத் தொடுத்தேன்.

திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சம் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்துக்குச் செல்லமாட்டோம். மதியாதார் தலைவாசல் மிதிக்கமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.