எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான்.. மற்ற கட்சிகள் கிடையாது: எடப்பாடி பழனிசாமி!

“சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தயராக இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 4) நடந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறியதாவது:-

மாற்றுக் கட்சியினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
தமிழக மீனவர்கள், நம் நாட்டு எல்லைக்குள் தான் மீன்பிடிக்கின்றனர். ஆனால், கடல் பரப்பில் எல்லைக்கோடு எதுவும் கிடையாது. இது தெரியாமல், மீனவர்கள் ஒரு சிலர், எல்லையைக் கடந்து சென்றுவிட்டால், அவர்களை எச்சரித்து அனுப்ப வேண்டும். ஆனால், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது, மீனவர்களிடம் இருந்து மீன்களை அள்ளிச் செல்வது போன்ற செயல்கள் கண்டிக்கத்தக்கது, ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்தப் பிரச்சினைக்கு இந்தியா – இலங்கை அரசுகள் தீர்வு காண வேண்டும். மத்திய, மாநில அரசுகளும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு யார் தாரை வார்த்து கொடுத்தது என்று அனைவருக்கும் தெரியும்.

தருமபுரியில் மாவட்டத்தை நிர்வகிக்கும் ஆட்சியரையும், சட்டம் – ஒழுங்கை காக்கும் காவல் துறை எஸ்.பியையும் திமுக மாவட்டச் செயலாளர் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது. அப்படி இருக்கும்போது, சாதாரண அலுவலர்களின் நிலை எப்படி இருக்கும்? அரசு இயந்திரம் எப்படி செயல்படும்?” என்றார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பாஜக உடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “வரப்போகும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த தயாராக இருக்கிறோம். எங்களுக்கு இருக்கும் ஒரே எதிரி திமுகதான். மற்ற கட்சிகள் எங்களுக்கு எதிரி கிடையாது. தேர்தலில் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் இருக்க வேண்டும். மக்கள் விரோத திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. அப்போது யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியும். இப்போது கூட்டணி குறித்து ஊகத்தின் அடிப்படையில் பதிலளிக்க முடியாது” என்றார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகார் குறித்த கேள்விக்கு, “தனிப்பட்ட நபரின் பிரச்சினை குறித்து பேச முடியாது” என்றார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைத்தது போல, முதல்வர் ஸ்டாலினை அப்பா என்று அழைக்கப்படுவது குறித்த கேள்விக்கு, “இப்படி அழைக்கப்படுவது சரியா என்பதை அவர்கள் உணர வேண்டும். இதனால் குடும்பத்தில் பிரச்சினை வந்துவிடும்” என்று பதிலளித்தார்.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக பங்கேற்று, தனது கருத்துகளை தெரிவிக்கும். தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுக்கப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், “நாங்கள் ஏதாவது சொன்னோமா? யாரோ கேட்பது குறித்து என்னிடம் கேட்காதீர்கள்” என்றார்.

மேலும், “அதிமுகவுக்கு 2014-ல் 37 எம்.பி.க்கள் இருந்தபோது, காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி, 22 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கச் செய்து, காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வைத்தோம். இன்றைக்கு அதிமுகவுக்கு எம்.பி.க்கள் இல்லை. திமுகவிடம் இருக்கும் எம்.பி.க்கள் மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்றாலும், நீட் தேர்வு வேண்டாம் என்றாலும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் அப்படி செய்வதில்லை. மத்திய அரசை எதிர்ப்பதாக, திமுக பாசாங்கு காட்டுகிறது. ஏதாவது செய்துவிட்டால், ரெய்டு வந்துவிடும். அந்த அளவுக்கு ஊழல் செய்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.