ரமலான் வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது: உதயநிதி ஸ்டாலின்!

‛ரமலானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலபேருக்கும் கோபம் வரும். ஆனால் அதை பற்றியெல்லாம் நமக்கும் கவலை இல்லை. ரமலானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால் இன்னும் 100 முறை கூட மீண்டும் மீண்டும் ரமலான் வாழ்த்தை சொல்லிக்கொண்டே இருப்போம்” என்று சென்னையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

விரைவில் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர். சூரிய உதயத்தில் இருந்து மறையும் வரை இஸ்லாமியர்கள் இந்த விரதம் கடைப்பிடிப்பார்கள். அதன்பிறகு மாலையில் இஃப்தார் விருந்து சாப்பிட்டு நோன்பை நிறைவு செய்வார்கள். இந்நிலையில் தான் சென்னை ராயப்பேட்டையில் ராமலானை முன்னிட்டு தமிழ்நாடு வஃக்பு வாரியத்தின் ஒருங்கிணைப்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

வஃக்பு வாரியத்தின் ஏற்பாட்டில் நடக்க கூடிய சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களை எல்லாம் சந்திப்பில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். முதலில் உங்கள் அனைவருக்கும் புனித ரமலான் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

ரமலானுக்கு நாம் வாழ்த்து சொல்வதை பார்த்தால் பலபேருக்கும் கோபம் வரும். ஆனால் அதை பற்றியெல்லாம் நமக்கும் கவலை இல்லை. ரமலானுக்கு வாழ்த்து சொல்வதால் பலபேருக்கு கோபம் வருகிறது என்றால் இன்னும் 100 முறை கூட மீண்டும் மீண்டும் ரமலான் வாழ்த்து சொல்லிக்கொண்டே இருப்போம். இன்றைக்கு வஃக்பு வாரியத்தின் சார்பில் ரம்ஜான் நோன்புக்கான தொகுப்புகளை இங்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம். இதற்காக 25க்கும் மேற்பட்ட தர்காக்கள் அந்த பொருட்களை நன்கொடையாக கொடுத்துள்ளன. அந்த தர்காக்களுக்கும், தர்கா நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இந்தியாவிலேயே சிறுபான்மையினருக்கான சொந்த வீடு போன்று மாநிலம் இருக்கிறது என்றால் அது தமிழ்நாடு தான். அதை தைரியமாக சொல்லலாம். சிறுபான்மை மக்களின் மனதில் பெரும்பான்மை பிடித்த அரசு என்றால் நம்முடைய திராவிட மாடல் அரசு தான். அதற்கு உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சியும், அன்பும், பாசமுமே தான் சாட்சி. இஸ்லாமியர்களுக்கும், திராவிட இயக்கத்துக்கும் இடையேயான உறவு என்பது இன்று, நேற்று தொடங்கிய உறவு கிடையாது. காயிதே மில்லத் காலத்தில் இருந்தே திராவிட இயக்கம் இஸ்லாமியர்களின் அன்பை பெற்று செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கருணாநிதி மீது காயிதே மில்லத்துக்கு பெரிய மதிப்பும், மரியாதையும் இருந்தது. காயிலே மில்லத்தும், கருணாநிதியுடன் நல்ல நட்பாக உற்ற தோழராக இருந்தார். காயிதே மில்லத் தனது இறுதி காலத்தில் உடல் நலம் சரியின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். கருணாநிதி, காயிதே மில்லத்தின் உடல்நலனை விசாரிக்க மருத்துவமனை சென்றார். அங்கு கருணாநிதியின் கைகளை பற்றி கொண்ட காயிதே மில்லத் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு நீங்கள் செய்யும் நலதிட்டங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என்று கூறினார். அந்த அளவுக்கு இஸ்லாமியர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவர். கருணாநிதியின் வழியில் இன்றைய முதல்வரும் இஸ்லாமியர்களுக்கு அனைத்து வழிகளிலும் துணை நின்று வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.