ஒரு நிலையாவே இருக்க மாட்டீங்களா?: விஜயலட்சுமி மீது வீரலட்சுமி காட்டம்!

சீமான் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இதற்கிடையே இனி எந்தவொரு புகாரும் அளிக்கப்போவதில்லை எனக் கூறி பாலியல் புகார் அளித்த நடிகை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அது இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் சீமான் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் விசாரணையும் நடத்தி வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமானை நேரடியாக போலீஸ் நிலையத்திற்கும் அழைத்து விசாரித்தனர். சென்னை ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்தே போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதற்கிடையே போலீஸ் விசாரணைக்குத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இதைச் சீமானும் வரவேற்று இருந்தார்.

இதற்கிடையே நேற்று அந்த நடிகை மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர், “நான் இனி எந்த புகாரும் தரப்போவது இல்லை. புகார் கொடுத்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. இது தான் என் கடைசி வீடியோ.. எனக்கு நியாயம் கிடைக்காது.. எனக்கு நியாயம் கிடைக்கவும் விடமாட்டார்கள்” எனச் சொல்லி வீடியோவை வெளியிட்டு இருந்தார். இது தமிழக அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

இதற்கிடையே அந்த நடிகைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

சகோதரியே, நீங்கள் 2011ல் சீமான் மீது முதலில் பாலியல் புகார் அளித்தீர்கள். அந்த புகாரை அதிமுக அரசு ஏன் கிடப்பில் போட்டது என்பது குறித்து நான் எனக்கு இருக்கும் அதிமுக நட்பு வட்டாரத்தில் விசாரித்தேன். அந்த நடிகை நிலையாக இருக்க மாட்டார். எப்போது வேண்டுமானாலும் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொள்வார் என்பதாலேயே சீமானுக்கு அந்த அரசு ஆதரவாக நடந்து கொண்டது. கடந்த 2023ல் நீங்கள் மீண்டும் புகார் அளிக்க வந்தீர்கள். கமிஷ்னர் அலுவலகத்தில் நானும் வந்தேன், புகார் அளித்தோம். தமிழகத்தில் உள்ள பெண்களுக்குத் தான் தந்தை ஸ்தானம் எனச் சொல்லும் தமிழக முதல்வரும் போலீசாரை முடுக்கிவிட்டார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்றார்கள். போலீசாரும் கடுமையான விசாரணை நடத்தினர். அது அனைவருக்கும் தெரியும். ஆனால் நீங்கள் திடீரென வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று புகாரை வாபஸ் பெற்றுவிட்டீர்கள்.

இப்போது மீண்டும் இன்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறீர்கள். உச்ச நீதிமன்றத்தில் எனக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை.. எனக்கு ஆதரவாக இல்லாமல் என்னை வைத்து அரசியல் மட்டும் செய்வதாக வீடியோ போட்டுள்ளீர்கள். எனக்கு ஒரு வீடியோவை அனுப்பிவிட்டு நீங்கள் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்திற்குப் போய் புகாரைத் திரும்பப் பெற்றுவிட்டீர்கள். இரு நாட்களுக்கு முன்பு தான் நீங்கள் என்னைத் தொடர்பு கொண்டு, உங்கள் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தீர்கள். நீதி பெற்றுத் தர உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைத்தீர்கள். நானும் சரி என உறுதியளித்தேன். தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யத் தேவையான நடவடிக்கை எடுத்து வந்தேன். உங்களுக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டிருந்தேன். இப்போது திடீரென வந்து நான் எதற்கும் வர மாட்டேன் எனச் சொல்லி இருக்கிறீர்கள்.

சீமானுக்கும் எனக்கும் கருத்தியல் ரீதியாகவே பிரச்சினை இருந்தது. அதை நான் அரசியல் ரீதியாகப் பார்த்துக் கொண்டு இருப்பேன். உங்களுக்காகவே நான் சீமானை பகைத்துக் கொண்டேன். மற்றபடித் தனிப்பட்ட முறையில் அவருக்கும் எனக்கும் பிரச்சினை இல்லை. சும்மா ஒரு வீடியோ வெளியிட்டு உங்களுக்கான ஆதரவு குறித்து நீங்களே தவறாகப் பேசுகிறீர்கள். இன்று நீங்கள் வெளியிட்ட வீடியோவுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை நீங்கள் வெளிப்படையாகக் கேட்கலாமே.. அதை விட்டுவிட்டு யாரும் எதுவும் செய்யவில்லை எனச் சொல்லி உதவ வருவோரை உதாசீனப்படுத்தக்கூடாது. இன்று நீங்கள் வெளியிட்ட வீடியோவுக்கு நீங்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் யாருமே உங்களுக்கு உதவ மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.