ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றதாக கூறப்படும் போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான முக்கிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 1980-களின் பிற்பகுதியில் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது, இந்திய ராணுவத்துக்கு ஸ்வீடன் நாட்டிலிருந்து 155எம்எம் பீரங்கிகள் வாங்குவது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டது. சந்தை மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமாக இந்த ஒப்பந்தம் போடப்பட்டதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்காக, போபர்ஸ் நிறுவனம் முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அப்போதைய மதிப்பில் ரூ.64 கோடி வரை (இன்றைய மதிப்பு ரூ.820 கோடி) லஞ்சம் கொடுத்தாக ஸ்வீடன் வானொலி இந்த ஊழலை முதல்முறையாக வெளிக்கொண்டு வந்தது. இது, 1989-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், 1990-ம் ஆண்டு போபர்ஸ் விவகாரத்தில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. 1999 மற்றும் 2000 காலகட்டத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், ஆதாரங்கள் இல்லையெனக்கூறி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில், நீண்ட காலம் அமைதியாக இருந்த இந்த விவகாரம் தற்போது மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. போபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கடிதத்தை சிபிஐ சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நீதித் துறைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் துப்பறியும் நிறுவனமான பேர்பேக்ஸ் தலைவர் மைக்கேல் ஹெர்ஷ்மேன், இந்தியாவில் இருந்து 400 பீரங்கி ஆர்டர்களை பெறுவதற்காக ஸ்வீடன் ஆயுத உற்பத்தி நிறுவனமான போபர்ஸ் லஞ்சம் கொடுத்ததாக அப்போது குற்றம்சாட்டியிருந்தார். இந்தப் பணம் ஸ்விஸ் வங்கியில் “மான்ட் பிளாங்க்” என்ற கணக்கில் செலுத்தப்பட்தை கண்டுபிடித்ததையடுத்து அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மிகவும் கோபமடைந்தார் என்றும் ஹெர்ஷ்மேன் கூறியிருந்தார். மேலும், அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் தனது விசாரணையை நாசப்படுத்தியதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், போபர்ஸ் தொடர்பான முக்கிய தகவல்களை வழங்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.