கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும்: மிருணாள் தாகூர்!

மிருணாள் தாகூர் எப்பொழுது தமிழ் படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் கமல் ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற தன் ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார் மிருணாள்.

மராத்தி, இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாகூருக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த 2022ம் ஆண்டு வெளியான சீதா ராமம் தெலுங்கு படம் மூலம் தான் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமானார் மிருணாள் தாகூர். அந்த படத்தில் இளவரசியாக நடித்து தெலுங்கு ரசிகர்களை மட்டும் அல்ல தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதில் இருந்து மிருணாள் தாகூரை கோலிவுட்டுக்கு அழைத்து வருமாறு தமிழ் ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த மிருணாள் தாகூரிடம் நீங்கள் எந்த தமிழ் ஹீரோவுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் சிறிதும் யோசிக்காமல் கமல் ஹாசனின் பெயரை சொன்னார். இதையடுத்து எந்த தமிழ் ஹீரோவுடன் சேர்ந்து டான்ஸ் ஆட ஆசைப்படுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அவர் விஜய் பெயரை சொல்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் மிருணாளோ சட்டென்று கமல் ஹாசனின் பெயரை தான் சொன்னார். கமலின் நடனத்திற்கு அவர் மிகப் பெரிய ரசிகையாம்.

மிருணாள் தாகூர் சொன்னதை கேட்ட ரசிகர்கள் கமல் ஹாசனிடம் கோரிக்கை விடுக்கத் துவங்கிவிட்டார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது, செல்லம் உங்களுடன் சேர்ந்து தான் நடிக்க விரும்புகிறது. அதனால் காலத்தை கடத்தாமல் விரைவில் உங்கள் படத்தில் மிருணாள் தாகூரை நடிக்க வைக்கவும் கமல் சார். செல்லத்தை கோலிவுட்டில் பார்க்க ஆண்டுக் கணக்கில் காத்துக் கொண்டிருக்கிறோம். செல்லத்தின் ஆசையை மட்டும் அல்ல எங்களின் ஆசையையும் நிறைவேற்றி வைக்கவும் என தெரிவித்துள்ளனர்.