இசைஞானி இளையராஜாவுடன் சீமான் சந்திப்பு!

சென்னை தியாகராயர் நகரில் உள்ள இளையராஜா இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-

இலண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில் வருகின்ற 08.03.2025 அன்று புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்றம் செய்யவுள்ள இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்களை இன்று (05-03-2025) சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

தமிழர்தம் உள்ளங்களிலும், இல்லங்களிலும் தன் இசையால் நீக்கமற நிறைந்திருக்கும் இசை இறைவன் ஐயா இளையராஜா அவர்கள், மேற்கத்திய இசை வடிவமான சிம்பொனியை வெறும் 34 நாட்களில் உருவாக்கி அரங்கேற்றுவதன் மூலம் தமிழர்களின் பெருமையை உலகெங்கும் பரவிடச் செய்யவிருப்பது ஒவ்வொரு தமிழருக்கும் பெருமிதம் அளிக்கும் இனிய திருநாளாகும். இவ்வரலாற்றுப் பெருநிகழ்வு சிறப்புற நடந்தேற என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து கொண்டேன்!

உலக அரங்கில் தமிழ்ப்பேரினத்திற்குப் பெருமை சேர்க்கவிருக்கும் இசை இறைவனின் இசைத் திருவிழாவில் உலகத்தமிழர்கள் அனைவரும் பங்கேற்று இறையருள் பெறுக என வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.