தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு அந்தோத்யா, தேஜஸ் என சமஸ்கிருதப் பெயர்கள் வைப்பதை கைவிட்டு விட்டு, தமிழ் மொழியில் பெயரிடும் பழைய முறையை கடைபிடிக்க வேண்டும் என்று திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறி இருந்தார். இந்நிலையில், ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும் என பாஜக மாநில பொதுச் செயலாளரான ராம சீனிவாசன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் இயங்கும் ரயில்களுக்கு அந்தோத்யா, தேஜஸ், வந்தே பாரத் என சமஸ்கிருதப் பெயர்களை வைத்து திணிக்காமல் தமிழ்நாட்டு ரயில்களில் செம்மொழி, முத்து நகர், வைகை, மலைக்கோட்டை, திருக்குறள் போன்ற தமிழ்ப் பெயர்களை மட்டுமே வைக்கின்ற நடைமுறைக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு மீண்டும் திரும்ப வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய அரசு தமிழில் பெயர் வைக்க வேண்டுமென கூறும் ஸ்டாலின், அவரது பெயர் எந்த மொழியில் உள்ளது என கேட்டுள்ளார் பாஜக மாநில பொதுச் செயலாளரான இராம சீனிவாசன். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு சில கேள்விகள்.. வந்தே பாரத் என்றும் தேஜஸ் என்றும் சமஸ்கிருதத்தில் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று மத்திய அரசை குற்றம் சொல்லி இருக்கிறீர்கள். ஐயா அவர்களுக்கு எனது முதல் கேள்வியே ஸ்டாலின் என்பது எந்த மொழி வார்த்தை என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்! இது தமிழ் இல்லை என்பதும்.. ரசிய மொழி என்பதும் பலருக்கு தெரியாது. உங்கள் மாமா கலாநிதி மாறன் அவர்கள் நடத்துகிற சன் டிவி என்பதில் வரும் சன் எந்த மொழி வார்த்தை என்பதை எடுத்துச் சொல்வீர்களா? சுயமரியாதை இயக்கத்தில் இருந்து வந்தோம் என்று மார்தட்டிக் கொள்கிறீர்களே சுயமரியாதை என்பது சமஸ்கிருதம் தான், திராவிடம் என்பது சமஸ்கிருத வார்த்தை தான், உதயசூரியன் என்பது சமஸ்கிருதம் தான், உதயநிதி என்பதும் சமஸ்கிருதம், துர்கா என்பது சமஸ்கிருதம், அழகிரி என்பது சமஸ்கிருதம், கருணாநிதி என்பது சமஸ்கிருதம், தயாளு அம்மா என்பது சமஸ்கிருதம்.. ராஜாத்தி அம்மாவும் அப்படியே ஐயா.. கனிமொழி இதில் தப்பினார் என்பதே சற்று ஆறுதல்..
உங்கள் அருமை நண்பர் வீரமணி என்கிற பெயரும் சமஸ்கிருதமே. சுப வீரபாண்டியன் என்பதும் சமஸ்கிருதம் தான் ஐயா. இந்த பெயர்களை எல்லாம் இந்தியாவின் எந்த மாநிலங்களில் போய் நீங்கள் சொன்னாலும் அம்மக்களுக்கு அதன் பொருள் புரியும். உங்களுக்கு ஆறுதலுக்காக இன்னும் சில தகவல்கள் சொல்கிறேன் ஐயா.. ராமதாஸ் அவர்கள் பெயர் சமஸ்கிருதம் தான். கேப்டன் விஜயகாந்த் என்கிற பெயர் சமஸ்கிருதம் தான். ரஜினிகாந்த் என்பதும் சமஸ்கிருதம், கமலஹாசன் என்பதும் சமஸ்கிருதம், விஜய் என்பதும் சமஸ்கிருதம், அஜித் என்பதும் சமஸ்கிருதம், தனுஷ் என்பதும் சமஸ்கிருதம், விக்ரம் என்பதும் சமஸ்கிருதம், சூர்யா என்றாலும் சமஸ்கிருதம், கார்த்தி என்றாலும் சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தில் ஸ்ரீமான் என்று சொல்லப்படுவது தான் தமிழில் சீமான் என்று அழைக்கப்படுகிறது என்பது சீமானுக்கே தெரியாது.
கேள்விகள் இத்துடன் முடியவில்லை ஐயா ஸ்டாலின் அவர்களே உங்கள் காவல்துறையில் கவச வாகனங்களை வஜ்ரா என்று அழைக்கிறீர்களே அது சமஸ்கிருதம் இல்லையா? உங்கள் மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்துகிறீர்களே பாதாளம் என்பது சமஸ்கிருதம் இல்லையா? அரசு மருத்துவமனைகளில் ரத்த தான முகாம் நடத்துகிறீர்களே ரத்த தானம் என்கிற வார்த்தை எந்த மொழி வார்த்தை என்பதை ஸ்டாலின் அவர்கள் சொல்வாரா? சங்க இலக்கியங்கள் என்று சொல்கிறீர்களே சங்கம் என்ற வார்த்தை சமஸ்கிருதம் என்பது உங்களுக்கு தெரியாது ஐயா. உங்களுக்கு எழுதிக் கொடுப்பவர்களுக்கும் இது தெரியாது என்பதுதான் கொடுமை.. கடைசியாக ஒன்றைச் சொல்கிறேன். தங்கள் தந்தை எழுதிய குறலோவியத்தை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்தீர்களே ஏன் என்று தமிழக மக்கள் தெரிந்து கொள்ளலாமா? சமஸ்கிருதத்தை செத்த மொழி என்று கூறும் திமுகவினர் தங்கள் தலைவரின் புத்தகம் செத்த மொழியில் வந்ததை ஏன் விரும்பினார்கள்? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.