சனாதன தர்மம் தொடர்பான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிய வழக்குகள் பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் சமூக நீதிக்கு எதிரானது என்றும், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போல ஒழிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் இந்தப் பேச்சுக்கு நாடு முழுவதும், பாஜக மற்றும் இந்துத்வா அமைப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்பு வலுத்தது. நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும், தான் பேசிய கருத்தில் உறுதியாக இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மஹாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் வழக்குகளைத் தொடர்ந்தனர்.
உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்துப் பேசிய விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்த மனுவை, ஏற்கனவே விசாரித்த உச்சநீதிமன்றம், அவருக்கு எதிரான வழக்குகளில் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாராஷ்டிரா மாநில அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக உதயநிதி பேசியுள்ளதாகவும், பொறுப்பற்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளதாகவும் வாதிட்டார். அதற்கு உதயநிதி ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மகாராஷ்டிராவை தவிர பாட்னா, ஜம்மு, பெங்களூர் ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அனைத்து வழக்குகளையும் சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் இடத்திற்கு, அதாவது தமிழ்நாட்டிற்கு மாற்றலாம் என்று வாதிட்டார். இதையடுத்து, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை அமைதியாக இருக்க வலியுறுத்திய நீதிபதிகள், “தொடர்ந்து புகார்களைப் பதிவு செய்து கொண்டே போக முடியாது” எனக் கூறி, உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடை தொடரும் என உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்ற அனுமதி இன்றி உதயநிதி மீது மேலும் புதிய வழக்குகள் பதிவு செய்யக் கூடாது எனவும், அவரது மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க புதியதாக வழக்குத் தொடர்ந்த எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் அறிவுறுத்தினர். வழக்குகளை சென்னைக்கு மாற்ற முடியவில்லை என்றாலும் கர்நாடகாவுக்கு மாற்ற உதயநிதி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை ஏப்ரல் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.