தமிழகத்திலும் ஒரு ஏக்நாத் ஷிண்டே புறப்பட தயாராகி விட்டார் என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதை கண்டித்து, தமிழக பா.ஜ., சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த உண்ணாவிரதத்தில் அண்ணாமலை, மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், மாநில செயலர்கள் கராத்தே தியாகராஜன், வினோஜ் செல்வம், நடிகர் ராதாரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் அண்ணாமலை பேசியதாவது:-
தி.மு.க., ஆட்சிக்கு வந்து, 15 மாதங்கள் முடிவடைந்துள்ளன. ஆட்சிக்கு வருவதற்கு முன், தி.மு.க., 92 குறுந்தலைப்புகளில், 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. இது தவிர, 10 வாக்குறுதிகளை தொலைநோக்கு திட்டமாகவும் அறிவித்தது. தி.மு.க., அரசு, இரண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்தும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
‘சொத்து வரி உயர்த்த மாட்டோம்’ என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்ததும், 150 சதவீதம் மேல் சொத்து வரியை உயர்த்தினார். பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக கூறினர்.பெட்ரோல் மட்டும், லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஏழு மாதங்களில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு, 14.50 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு, 17 ரூபாயும் குறைத்துள்ளார். தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் உள்ளது.தி.மு.க., அரசு, ஒவ்வொரு தவறையும் செய்து விட்டு, பா.ஜ., கேள்வி கேட்ட பின் திரும்பப் பெறுவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
விளம்பரத்திற்காக வேளாண் பட்ஜெட் போட்டால் மட்டும் போதாது. மத்திய அரசு, விவசாயிகளுக்கு, 6,000 ரூபாய், காப்பீட்டு திட்டம் என, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இந்தியா முழுதும் ஒவ்வொரு மாநிலத்திலும், எதிர்க்கக் கூடிய கட்சிகள் இல்லாமல், பா.ஜ., வளர்ந்து வருகிறது. மஹாராஷ்டிராவில் 105 எம்.எல்.ஏ.க்களை பெற்ற பா.ஜ.,வை தனிமைப்படுத்திய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தது. சிவசேனா அமைச்சர்கள், பா.ஜ., நிர்வாகிகளை கைது செய்து, சிறையில் அடைத்தனர். சமீபத்தில், சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, 12 பேருடன் வெளியே வந்தார். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரித்தது. பா.ஜ., ஆதரவுடன், ஏக்நாத் முதல்வராகி உள்ளார். இதற்கான காலம், தமிழகத்திலும் வரும்.
பால் தாக்கரேவின் முதல் மகன், விந்த் தாக்கரே. அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை. அவர் நடித்த படம் ஓடவில்லை. அதேபோல், தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் முதல் மகன் முத்து, சினிமாவில் நடிக்க சென்றார்; வெற்றி பெறவில்லை. பால் தாக்கரேவின் இரண்டாவது மகன் ஜெயதேவ் தாக்கரே. அவர் குடும்பத்தில் இருந்து விலகி இருக்கிறார். கருணாநிதியின் இரண்டாவது மகன் அழகிரியும், குடும்பத்தில் இருந்து விலகி உள்ளார். பால் தாக்கரேவின் மூன்றாவது மகன் உத்தவ் தாக்கரேவுக்கு, மஹாராஷ்டிரா முதல்வராக வாய்ப்பு கிடைத்தது. இதேபோல் கருணாநிதியின் மூன்றாவது மகன் ஸ்டாலின், தமிழக முதல்வராக உள்ளார். உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரேவுக்கு அரசியல் ஆசை. அவர், சிவசேனாவின் இளைஞரணி தலைவர். அதேபோல், முதல்வர் ஸ்டாலினின் மகனுக்கு அரசியல் ஆசை. அவரும் இளைஞரணி தலைவராக உள்ளார். ஆதித்யா, அமைச்சரவைக்குள் கொண்டு வரப்பட்டார்; ஏக்நாத் ஷிண்டே புறப்பட்டார். தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் செய்ய, ஏற்பாடு நடக்கிறது. இங்கேயும் ஒரு ஏக்நாத் புறப்பட தயாராகி விட்டார்.
தி.மு.க., அதிகம் பேசுவது, சமூக நீதி. ஜனாதிபதியை தேர்வு செய்ய, பா.ஜ.,வுக்கு முதல் வாய்ப்பு கிடைத்த போது இஸ்லாமியரான அப்துல் கலாமுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இரண்டாவது முறை, தலித் சமூகத்தை சேர்ந்த ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டது.
தற்போது, மூன்றாவது முறையாக வாய்ப்பு கிடைத்தபோது, பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை ஜனாதிபதி வேட்பாளாராக அறிவித்துள்ளது. இது தான் சமூக நீதி.தமிழகத்தில், பா.ஜ., சாதாரண எதிரிகளை எதிர்க்கவில்லை. பணத்தை கையில் வைத்து, ஜனநாயகத்தை விலை பேசும் அரசியல்வாதிகளை எதிர்க்கிறது. அதையும் மீறி வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வைச் சேர்ந்த, 25 எம்.பி.,க்கள் வெற்றி பெறுவர்.தி.மு.க.,வுக்கு எதிராக பா.ஜ.,வால் இதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாது.
வரும் டிச., 31க்குள், தி.மு.க.,வின், 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க வேண்டும்.இல்லை எனில், தமழக பா.ஜ.,வினர் பங்கேற்கும் பாதயாத்திரை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் துவங்கி, சென்னை கோபாலபுரத்தில் முடிவடையும். இந்த பாத யாத்திரையை, 2023 ஜனவரி 1 காலை, 6:00 மணிக்கு நான் துவக்கி வைப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.