கொடநாடு விவகாரத்தில் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று, ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் கூறினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. முன்னதாக, நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுகளுக்கு எதிராக இபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், “பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வு பொதுக்குழு தொடர்பாக முடிவெடுக்கும்” என்று உத்தரவிட்டனர். அத்துடன் ஜூன் 23ம் தேதி அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிரான வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் வரவிருந்த நிலையில், அதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
இதனிடையே, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்துள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் நகலை பார்த்த பின், விசாரிப்பதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பிக்கும் உத்தரவே இறுதியானது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால் சென்னை உயர் நீதிமன்றம் என்ன செல்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
கொடநாடு விவகாரத்தில் பல பேர் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று சொல்லி வருகிறார்கள். தமிழக அரசு உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைக்கிறார்கள். எங்களை வளர்த்து அரசியலில் ஆளாக்கிய அம்மாவின் வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில் குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அதிமுக தொண்டனின் எண்ணமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக கருதப்பட்டவர்கள் மர்மமான முறையில் அடுத்தடுத்து மரணமடைந்தனர். கொடநாடு எஸ்டேட்டில் என்ன நடந்தது என்பது விலகாத மர்மமாகவே இன்னும் உள்ளது.
இந்த மர்ம மரணங்களுக்குப் பின்னணியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக, தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமூவேலிடம் வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சயான், மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்திருந்தார். இதனால், கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த விவகாரம் மீண்டும் தூசு தட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த வழக்கில் தனது பெயரை திட்டமிட்டு திமுக சேர்க்கிறது என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே மறுப்பு தெரிவித்தார்.
ஆட்சியமைந்த உடனேயே கொடநாடு குற்றாவாளிகளை கண்டறிந்து சிறையில் தள்ளுவோம் என்று ஸ்டாலின் சூளுரைத்தார். ஆனால், ஆமை வேகத்திலேயே கொடநாடு வழக்க நடந்து வருகிறது. அதேபோல், அதிமுக ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும்; சிறை செல்வார்கள் என்றார். ஆனால், ரெய்டோடு அனைத்து நடவடிக்கைகளும் நின்று விடுகிறது.
இந்த பின்னணியில், அதிமுக பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் கொடநாடு கொலை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கோரிக்கை விடுக்கிறார். 17 முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் கூறுகிறார். ஓபிஎஸ் தரப்பு அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், இதுபோன்று சொந்த கட்சிக்கே பிரச்சினையாகக் கூடிய விஷயங்களை கையில் எடுத்து வருவதாக தெரிகிறது. அதேசமயம், ஓபிஎஸ் தரப்பினரே இந்த விஷயங்களை வலியுறுத்துவதால், இனிமேலாவது தமிழக அரசு விரைந்து செயல்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.