தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென்மாநிலங்களின் தொகுதிகளை குறைப்பதே திட்டம்: ரேவந்த் ரெட்டி!

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து சென்னையில் வரும் மார்ச் 22ம் தேதி கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார்.

நாடு முழுக்க இப்போது 543 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மக்கள் தொகை அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்ப லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக டிலிமிட்டேஷன் எனப்படும் தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதற்குத் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தொகுதி மறுசீரமைப்பு அதாவது மறுசீரமைப்பு மக்கள்தொகை அடிப்படையில் செய்யப்பட்டால் நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.. வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். மக்கள்தொகை அதிகரிப்பு பிரச்சினையாக இருந்த போது, அதைச் சிறப்பாகக் கையாண்டு மக்கள்தொகையைக் குறைத்த மாநிலங்களுக்கு இது தண்டனை போல ஆகிவிடும் என்பதே வாதமாக இருந்தது.

இது தொடர்பாகத் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. வரும் மார்ச் 22ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இதற்கு இப்போது வரை ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களின் பல்வேறு கட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து தமிழ்நாடு குழு அழைப்பு விடுத்தது. அமைச்சர் கே.என் நேரு, திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ ராசா, கலாநிதி வீராசாமி ஆகியோர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை நேரில் சந்தித்து அழைத்தனர். அப்போது டெல்லி காங்கிரஸ் தலைமையின் ஒப்புதலைப் பெற்று, கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ரேவந்த் ரெட்டியும் தமிழ்நாடு குழுவினரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரேவந்த் ரெட்டி, “மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு ஏற்க முடியாது. இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் அனுமதி பெற்று இந்த கூட்டத்தில் பங்கேற்பேன். தொகுதி மறுசீரமைப்பு தற்போது மத்திய அரசு செய்வது தொகுதி மறுசீரமைப்பு அல்ல. தென்னிந்தியாவின் தொகுதிகளைக் குறைக்கும் நடவடிக்கை. இதை ஏற்க முடியாது.. இந்த விவகாரத்தை எப்படிக் கையாளலாம் என்பது குறித்து அனைத்து கட்சிகளின் கருத்துகளைக் கேட்கவே ஸ்டாலின் இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்” என்று அவர் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. என். நேரு, “மோடி அரசு மேற்கொள்ளும் தொகுதி மறுசீரமைப்பு சிக்கலால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே தென் மாநில முதல்வர்களை அழைத்துக் கூட்டத்தை நடத்துகிறோம். அதில் டெல்லி தலைமை அனுமதியைப் பெற்றுப் பங்கேற்பதாக ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார்” என்றார்.

தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு என்பது மிக முக்கியமான பிரச்சினை.. இது ஒட்டுமொத்தமாக அனைத்து தென்மாநிலங்களையும் பாதிக்கும். தென்மாநிலங்கள் மட்டுமின்றி இது வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களையும் கூட பாதிக்கும். இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஒருங்கிணைக்க முயல்கிறார். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரேட்டி மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் எங்களுடன் சேர்ந்து இந்த விவகாரத்தில் குரல் கொடுப்பார் என நம்புகிறோம்” என்றார்.