டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது: அமலாக்கத்துறை!

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது என்றும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக சென்னையில் கடந்த வாரம் 3 நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் பெருமளவு ரொக்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது. சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட 7 அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான ஆலை தயாரிப்பு நிறுவனம் உட்பட மொத்தம் 25 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கோண்டனர். டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திலேயே நடைபெற்ற இந்த சோதனை தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுவிலக்கு துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது பண மோசடி வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி ஜாமீனில் உள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ள சூழலில் மதுபான கொள்முதல், விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை ரெய்டு மேற்கொண்டது பரபரப்பை கிளப்பியது.

இந்த நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

பாட்டிலுக்கு ரூ 10 முதல் 30 வரை கூடுதல் வசூலிக்கப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. சோதனையில் ரூ.1000 கோடி கணக்கில் வராதது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.