செந்தில் பாலாஜி வழக்கில் மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்: உயர் நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரிய மனு மீது மார்ச் 21 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, முழுமையான விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர், செந்தில் பாலாஜி உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். இந்த கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து ஒரே வழக்காக விசாரிக்க சென்னை எம்.பி எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரியும் இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியுள்ள நிலையில் அது குறித்து விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே அவகாசம் கேட்பதாக குற்றஞ்சாட்டினார். வேறு வேறு பதவிகளுக்காக பணம் பெற்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை இணைத்து விசாரிக்க விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை எனவும், அப்படி விசாரித்தால் விசாரணை எப்போது முடியும் என நினைத்துக் கூட பார்க்க முடியாது எனக் கூறினார்.

இதனையடுத்து, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார்.