நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கப்பட்டால், வடக்கு, தெற்கு என்றும் இந்தி பேசும் மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை குறித்து சமீபத்தில் கோவையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொகுதி மறுவரையறை செய்வதால் தமிழகத்தின் எண்ணிக்கை குறையாது எனக் கூறினார். ஆனால், எந்தெந்த மாநிலங்களுக்கு தொகுதி கூடுகிறது என்பதைப் பற்றி தெளிவாக கூறவில்லை. இதன்மூலம், பாஜக, தொகுதி மறுவரையறை பிரச்சினையில் வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளவில்லை. இதனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களிடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. அதன் காரணமாகதான், தமிழக முதல்வர் 58 கட்சிகள் அடங்கிய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். அதில், தொகுதி மறுவரையறையை இன்னும் 30 ஆண்டுகளுக்கு தள்ளிவைக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் இந்தியா கூட்டணியின் நிலை என்ன? காங்கிரசின் நிலை என்ன? என்று பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கேள்விக் கணைகளை தொடுத்துவந்தார்கள். ஆனால், நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், ஊடக பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸின் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
2019-ல் மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜேமி ஹின்ட்சன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின்படி 2026-ல் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்களுக்கான இடங்கள் வரையறுக்கப்பட்டன. இந்த ஆய்வின்படி அதிக தொகுதிகளை இழக்கும் மாநிலங்கள் தமிழ்நாடு 8, கேரளா 8, ஆந்திரா மற்றும் தெலுங்கானா 8, ஒடிசா 3, மேற்கு வங்கம் 4, கர்நாடகா 2, இமாச்சல பிரதேசம் 1, பஞ்சாப் 1 மற்றும் உத்தரகாண்ட் 1 ஆகும். கூடுதல் தொகுதிகளை பெறும் மாநிலங்கள் உத்தரபிரதேசம் 11, பீகார் 10, ராஜஸ்தான் 6, மத்தியபிரதேசம் 4, ஜார்க்கண்ட் 1, ஹரியானா 1, குஜராத் 1, தில்லி 1 மற்றும் சத்தீஸ்கர் 1 ஆகும்.
எனவே, மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை கூட்டக் கூடாது. இல்லையென்றால் வடக்கு, தெற்கு என்றும், இந்தி பேசுகிற மாநிலங்கள், இந்தி பேசாத மாநிலங்கள் என்றும் பிளவு ஏற்பட்டு தேசிய ஒருமைப்பாடு சீர்குலையும். இதை பாஜக உணரவில்லை என்றால், இந்தியாவில் ஜனநாயகத்துக்கு பேரழிவு ஏற்படும். 75 ஆண்டுகளாக அரசமைப்புச் சட்டம், நீதிமன்றங்களின் மூலமாக பாதுகாக்கப்பட்ட மத்திய, மாநில உறவுகள் சிதைந்து சின்னாபின்னமாகிவிடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் செல்வப் பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, 2010 ஆம் ஆண்டு ரூபாய் இலட்சினையை மாற்றியமைத்தது. அப்போது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, எந்த மாநிலத்தின் மீதும் மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கவில்லை. மொழியை பாதுகாப்பதற்கு போராட வேண்டிய அவசியம் அப்போது இல்லை. ஆனால், தற்போது ஆட்சியில் இருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு ஜனநாயக விரோதமாக வலிந்து மும்மொழிக்கொள்கையை மாநிலங்கள் மீது திணிக்கின்றது. அதை ஏற்றுக்கொண்டால்தான் நிதி தருவோம் என ஆணவத்துடன் செயல்படுகிறது. தமிழர்களையும், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வசைபாடுகிறது.
மொழிக்கொள்கையில் தமிழ்நாடு கொண்ட கொள்கையும், உறுதியான நிலைப்பாட்டையும் சரி என்று மற்ற மாநிலங்கள் உணர்ந்து வருகிறது. அதை உரக்க வெளிப்படுத்தும் நேரமாக இது அமைந்து வருகிறது. அது அவசியமாகிறது. அதை உணர்ந்துதான், நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் ‘₹’-க்கு பதில் ‘ரூ’ என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.