மாநிலங்களவை எம்.பி. ஆக இளையராஜா நியமனம்!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவையில் மொத்தமுள்ள எம்பிக்களில் 12 பேரை குடியரசுத் தலைவர் தமது அதிகாரத்துக்கு உட்பட்டு உறுப்பினர்களாக நியமிக்கலாம். இதன்படி,தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளரான இளையராஜா மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தலைமுறை தலைமுறையாக மக்களின் மனம் கவர்ந்தவர் இசையமைப்பாளர் இளையராஜா என்றும், எளிய பின்னணியில் இருந்து வந்து உயர்ந்த சாதனைகளை படைத்தவர்’ எனவும் மோடி தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளையராஜாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்’ என்று அவர் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பிலான புத்தகம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதி இருந்த இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். இளையராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி இருந்தது. பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது தவறானது என்று சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராக கருத்துகள் பகிரங்கமாக பதிவிடப்பட்டன. அதே சமயம், இளையராஜாவின் கருத்து சரியானது எனவும் அவருக்கு ஆதரவு குரல்களும் ஒலித்தன. பிரதமர் நரேந்திர மோடி குறித்து தான் தெரிவித்த கருத்தை திரும்பப் பெறமாட்டேன் என்று இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்திருந்த நிலையில். தற்போது அவர் எம்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொழி, இனம் போன்ற பாகுபாடுகளை கடந்து சினிமா இசை ரசிகர்களை பல பத்தாண்டுகளாக கட்டிப்போட்டு உள்ள இளையராஜா, பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இசையுலகில் மேற்கொண்ட மகத்தான சாதனைகளுக்காக பத்மவிபூஷண், பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பலமுறை பெற்றுள்ளார்.

இதைப்போல தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கும் நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. கேரளாவை சேர்ந்த பி.டி.உஷா, சர்வதேச தடகள போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவரது வெற்றிகளை கவுரவிக்கும் வகையில் இந்த பதவி அளித்து மத்திய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. பி.டி.உஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘குறிப்பிடத்தக்க திறன் பெற்ற பி.டி.உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகிறது. அத்துடன் வளர்ந்து வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக கடந்த பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இவர்களை தவிர கர்நாடகாவை சேர்ந்த சமூக சேவகரும், தர்மஸ்தலா கோவில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஆந்திராவை சேர்ந்த பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான வீரேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர். இவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அவர்கள் சார்ந்த துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை பாராட்டி உள்ளார். மாநிலங்களவையின் புதிய நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த 4 பேரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர். மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தென்னிந்திய மாநிலங்களில் பலவீனமாக இருக்கும் நிலையில், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை இங்கிருந்து தொடங்குவது என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த தேசிய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. இந்த சூழலில் தென்னக மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.