மார்ச் 23ல் ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தங்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று கூறி ஜாக்டோ – ஜியோ சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 23ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு சங்கங்களை வைத்துள்ளனர். தங்களின் உரிமை மற்றும் கோரிக்கைகளை இந்த சங்கத்தின் மூலமாக துறை அமைச்சர், முதல்வர் ஸ்டாலினுக்கு கொண்டு சென்று வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள முக்கிய அமைப்பு ஜாக்டோ ஜியோ. இந்த அமைப்பில் அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்ளனர். ஜாக்டோ ஜியோ சார்பில் அடிக்கடி மாநிலங்களில் போராட்டங்கள் என்பது நடத்தப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டம், பணி வரன்முறை, காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்பட பல்வேறு கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடர்ந்து போராட்டம் நடத்தி வரப்பட்டது. சென்னை தலைமை செயலகத்திலும் போராட்டம் என்பது நடத்தப்பட்டது. அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தான் ஜாக்டோ-ஜியோ சார்பில் தற்போது புதி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழக அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தங்களுக்கான கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனக்கூறி அவர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஜாக்டோ – ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் காந்திராஜ் கூறுகையில், ‛‛தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மார்ச் 23ல் (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அதன்பிறகும் அரசு மவுனம் காத்தால், மார்ச் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.