தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், ரெயில் ஓட்டுனர் பணியில் தமிழக தேர்வர்களுக்கு தமிழ்நாட்டில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
இந்திய ரயில்வே ஆள்தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் தொடர்வண்டி உதவி ஓட்டுனர் பணிக்கான (Assistant Loco Pilot) இரண்டாம் கட்ட கணினி முறைத் தேர்வுகள் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அத்தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு ஆந்திரம், தெலுங்கானம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவர்களை அலைக்கழிக்கும் நோக்கம் கொண்ட இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
இந்தப் பணிக்கான முதற்கட்ட கணினி முறை தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் 25 முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்திலேயே தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆனால், இப்போது நடைபெறும் தேர்வில் தமிழ்நாட்டிலிருந்து 6315 பேர் மட்டுமே பங்கேற்கின்றனர். அவர்களுக்குக் கூட தமிழகத்தில் தேர்வு மையம் அமைக்காமல் பிற மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியிருப்பது நியாயமல்ல. தமிழக தேர்வர்கள் திட்டமிட்டு அலைக்கழிக்கப்படுகின்றனரோ என்று தான் தோன்றுகிறது.
தொடர்வண்டி உதவி ஓட்டுனர் பணி என்பது தொடக்கநிலை பணிகளில் ஒன்றாகும். இத்தேர்வில் பங்கேற்க பல நூறு கி.மீ பயணித்து, அங்கேயே தங்கியிருந்து தேர்வு எழுதிவிட்டு திரும்புவது சாத்தியமல்ல. இது மன உளைச்சலை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு அவர்களின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.