ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!

ஷாம் நடித்துள்ள ‘அஸ்திரம்’ படம் மார்ச் 21-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மார்ச் 7-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட படம் ‘அஸ்திரம்’. ஆனால், இறுதியில் சரியான திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. விரைவில் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது மார்ச் 21-ம் தேதி ‘அஸ்திரம்’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளார்கள். இதன் பத்திரிகையாளர் காட்சி உட்பட அனைத்துமே முடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. ‘அஸ்திரம்’ படத்தின் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் வெளியிடுகிறது.

சண்முகமணி தயாரிப்பில் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. அரவிந்த் ராஜகோபால் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாம், நிரா, நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதன் கதை மற்றும் திரைக்கதை எழுதியிருக்கிறார் ஜெகன்.