கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும். அங்கு லூலூ மால் கொண்டு வரப்போவதாக சொல்கிறார்கள். அப்படி ஏதாவது மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாமக சார்பில் வெளியிடப்பட்ட நிழல் பட்ஜெட் விளக்க கூட்டம் சென்னை வடபழனியில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பாமகவின் நிழல் பட்ஜெட்க்கும் தமிழக அரசு வெளியிட்ட நிஜ பட்ஜெட்க்கும் உள்ள வித்தியாசங்கள் குறித்து விரிவாக பேசினார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-
இங்கிலாந்து நாட்டில் நிழல் பட்ஜெட் போடும் வழக்கம் உள்ளது. அதாவது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் நிழல் பட்ஜெட் போடுவார்கள் எப்படி ஆளும் தரப்பில் ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக அமைச்சர்கள் இருக்கிறார்களோ அதே போல எதிர்க்கட்சியில் வரிசையில் இருப்பவர்களும் நிழல் அமைச்சர்கள் ஒவ்வொரு துறைக்கும் இருப்பார்கள். ஆளும் தரப்பு பட்ஜெட் போடுவதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சி ‘ஷேடோ பட்ஜெட்’ அதாவது நிழல் பட்ஜெட் வெளியிடுவார்கள். அங்குள்ள அரசு அதிகாரிகளை எதிர்க்கட்சியினர் சந்தித்து புள்ளி விவரங்களை கேட்டால் அவர்கள் அனைத்து விவரங்களையும் கொடுப்பார்கள். நம்முடைய ஊரில் இருப்பது போல அதிகாரிகள் மறுக்க மாட்டார்கள். அதே பாணியில் தான் நம்முடைய ஊரில் பாமக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நிழல் பட்ஜெட்டை நாங்கள் வெளியிட்டு வருகிறோம்.
பாமக போடும் நிழல் பட்ஜெட் தமிழ்நாடு அரசு போடும் பட்ஜெட்டை விட சிறந்த பட்ஜெட். இந்த நிழல் பட்ஜெட் போல நூற்றுக்கணக்கான ஆவணங்களை பாமக சார்பில் நாங்கள் வெளியிட்டுள்ளோம். பாமகவை தவிர மற்ற எந்த கட்சி யாவது தமிழ்நாட்டில் நிழல் பட்ஜெட்டோ அல்லது மற்ற ஆவணங்களோ வெளியிட்டது உண்டா.? தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட எந்த விஷயத்திற்காவது மற்ற கட்சிகள் ஆவணங்களை வெளியிட்டது உண்டா ? எழில்மிகு சென்னை, சிங்காரச் சென்னை என்று விதவிதமாக பெயர் மாற்றுகிறார்கள் ஆனால் சென்னை வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிக் கொண்டுள்ளது. சென்னையில் ஒரு மழை வந்தால் உடனே அமைச்சர்கள் போன் செய்து அதிகாரிகளை போட் தயார் செய்ய சொல்கிறார்கள். அப்படியானால் 60 ஆண்டுகளாக நீங்கள் என்னதான் செய்தீர்கள்..? 60 ஆண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்த கட்சிகள் சென்னைக்கு என்னதான் அடிப்படை கட்டமைப்பை வசதியை உருவாக்கினார்கள். 1050மிமீ சென்னையில் ஆண்டுதோறும் மழை பெய்கிறது அதில் 900 மில்லி மீட்டர் வீணாக கடலுக்கு செல்கிறது. பெய்த மழை நீரை கடலுக்கு அனுப்பிவிட்டு பிறகு கடலில் இருந்து குடிநீரை எடுக்கிறார்களாம் அதற்கு 30ஆயிரம் கோடி செலவு செய்கிறார்கள் அதிபுத்திசாலிகள்.
கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ள இடத்தை சுற்றி 65 ஏக்கர் இடம் உள்ளது. அந்த இடத்தில் ஒரு பசுமை பூங்கா கொண்டு வர வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைத்தோம்.. அந்த பூங்காவை அமைத்தால் நடைப்பயிற்சி செல்வோர் உள்ளிட்ட 10லட்சம் பேர் பயன்பெறுவார்கள்.. பசுமை பூங்காவிற்கு பதிலாக அங்கு லூலூ மால் கொண்டு வரப் போவதாக சொல்கிறார்கள். அப்படி ஏதாவது மால் கொண்டு வந்தால் நாங்கள் சும்மா விடப்போவது கிடையாது. வெறும் வார்த்தைக்காக சொல்வது அல்ல நிச்சயம் நாங்கள் இதை சும்மா விட மட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.