முதல் படத் தயாரிப்பு பணியை முடித்த சமந்தா!

சமந்தா தயாரிப்பில் உருவாகி வரும் முதல் படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகி இருக்கிறது.

ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார் சமந்தா. இந்நிறுவனம் தயாரிப்பில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று அறிவிக்கப்பட்டது. இதன் இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் எதுவுமே தெரிவிக்கப்படாமல் இருந்தது. அதில் சமந்தா பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

தற்போது சமந்தா தயாரிப்பில் புதிய படம் ஒன்ரு தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. ‘சுபம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை ‘சினிமா பந்தி’ படத்தின் இயக்குநர்களான வசந்த் மாரிகண்ட்டி மற்றும் ப்ரவீன் ஆகியோர் இயக்கி இருக்கிறார்கள். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

‘சுபம்’ படத்தினை கனகவள்ளி டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகவுள்ளது.